’எட்டு எட்டா மனுஷன் வாழ்வைப் பிரிச்சுக்கோ...இப்ப எந்த எட்டில் நீ இருக்க தெரிஞ்சுக்கோ’ என்று வைரமுத்து ரஜினிக்கு எழுதியிருந்தாலும் அது இப்போது கனகச்சிதமாகப் பொருந்திவருவது நடிகர் விஜய் சேதுபதிக்குத்தான்.

இன்று சற்றுமுன்னர் தனது இன்ஸ்டாகிராமில் தான் கதாநாயகனாக அறிமுகமான ‘தென் மேற்குப் பருவக்காற்று’ படத்தின் எட்டாவது ஆண்டு என்று நினைவுகூறும் விஜய் சேதுபதி, அப்படத்தில் தன்னை அறிமுகப்படுத்திய இயக்குநர் சீனு ராமசாமிக்கும், அந்த சீனு ராமசாமிக்கே தன்னை அறிமுகப்படுத்திய ஒளிப்பதிவாளர், நடிகர் அருள் தாஸுக்கும் நன்றி தெரிவித்து ஒரு பதிவிட்டுள்ளார்.

வாழ்க்கை எப்படிப்பட்ட ட்விஸ்டுகள் கொண்டது பாருங்கள். அதே எட்டாவது ஆண்டில்... மீண்டும் அதே அருள்தாஸ் தனக்கு வில்லனாக நடிக்க, அதே இயக்குநர் சீனு ராமசாமியின் இயக்கத்தில், தேனி அருகே அதே லொகேஷனில் கடந்த ஒருவாரகாலமாய் ‘மாமனிதன்’ படப்பிடிப்பில் இருக்கிறார் விஜய்சேதுபதி.

தனக்கு ஏணியாக இருந்தவர்களை எட்டி உதைத்து பழசை சவுகர்யமாக மறந்துவிடும் சினிமாக்காரர்கள் மத்தியில், சினிமாவில் தற்போது இருக்கும் நடிகர்களிலேயே அதிக நன்றிக்கடன் பாராட்டுபவர் என்று விஜய் சேதுபதியைக் குறிப்பிடுவார்கள். தன்னை அறிமுகப்படுத்திய சீனு ராமசாமியின் இயக்கத்தில் ‘தென்மேற்குப் பருவக் காற்று’, ‘இடம் பொருள் ஏவல்’,’தர்ம துரை’க்குப் பின்னர் தற்போது நடித்துக்கொண்டிருக்கும் ‘மாமனிதன்’ விஜய் சேதுபதி சீனுவுடன் இணைந்திருக்கும் நான்காவது படம்.