நடிகர் விஜய் சேதுபதியின் படம் ஒன்று  தொடர் டெக்னீஷியன்களின் மாற்றத்தால் குழப்பத்தின் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கிறது.தான் எப்போதுமே சக நடிகர்கள், டெக்னீஷியன்கள் விவகாரத்தில் தலையிடுவதில்லை என்றும் இந்தக் குழப்பங்களுக்கு இயக்குநரும் தயாரிப்பாளர் தரப்புமே காரணம் என்று விஜய் சேதுபதி விளக்கம் அளித்துள்ளார்.

விஜய் சேதுபதி நடிக்கும் பெயர் சூட்டப்படாத 33 ஆவது படத்தை ’பேராண்மை’, ’புறம்போக்கு’ படங்களில் இயக்குநர் எஸ்.பி ஜனநாதனிடம் பணியாற்றிய வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்குகிறார்.ஜூன் மாதம் அப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு பழனியில் தொடங்கியது. அதைத் தொடர்ந்து படக்குழுவினர் ஊட்டி சென்று படப்பிடிப்பு நடத்தினர்.இப்படத்தை சந்திரா ஆர்ட்ஸ் சார்பாக இசக்கி துரை தயாரிக்கிறார்.இசையை மையமாகக் கொண்ட இக்கதையில் விஜய் சேதுபதி இசைக் கலைஞராக நடிக்கிறார்.

இப்படத்தில் நாயகியாக முதலில்  அமலாபால் நடிப்பதாக இருந்தது. ஆனால் அவர் அதிலிருந்து தகவல் கூட தெரிவிக்காமல் வெளியே அனுப்பப்பட்டார். ‘ஆடை’படத்தில் நிர்வாணமாக அமலாபால் நடித்திருந்தது இயக்குநருக்கு அலர்ஜியாகியிருக்கிறது.அடுத்து  அவருக்குப் பதிலாக மேகா ஆகாஷ் நடிக்கிறார் என்று சொல்லப்பட்டது.

இப்படத்துக்கு ஒளிப்பதிவாளராக மகேஷ் முத்துசுவாமியும் கலை இயக்குநராக ஜான் பிரிட்டோவும் பணியாற்றினர்.முதல்கட்டப் படப்பிடிப்பு முடிவதற்குள்ளாகவே கலை இயக்குநர் ஜான் பிரிட்டோ மாற்றப்பட்டு ராமலிங்கம் கலை இயக்குநராக நியமிக்கப்பட்டாராம்.முதல்கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் ராமலிங்கமும் மாற்றப்பட்டு  தற்போது மூன்றாவது நபராக வீரசமர் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். அதோடு படத்தின் ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசாமியும் அதிரடியாக  மாற்றப்பட்டிருக்கிறார். அவருக்குப் பதிலாக கயல் படத்தில் பணியாற்றிய வெற்றி ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறாராம். ‘விஜய்சேதுபதி 33’ படத்தில் நடக்கும் இந்த தொடர் அதிரடி  மாற்றங்களால், படம் நல்லபடியாக முடிந்து திரைக்கு வருமா அல்லது பாதியில் படுத்துவிடுமா என்று படக்குழுவினர் பயத்துடனே இருக்கிறார்களாம்.