இரு வாரங்களுக்கு முன்பே நம் இணையதளத்தில் எழுதியிருந்தபடி, இலங்கை கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரனின் பயோபிக் ‘800’ படத்திலிருந்து விஜய் சேதுபதி வெளியேறவிருக்கிறார் எனவும் அதை அவரே மிக விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிப்பார் எனவும் நம்பத்தகுந்த செய்திகள் நடமாடுகின்றன. ஆனால் லைகா நிறுவனத்துக்குக் கூட துவக்கத்தில் இதைவிட அதிக எதிர்ப்புகள் இருந்தன. அதை எதிர்த்த அத்தனை பேரும் தற்போது அந்த நிறுவனத்துடன் பணிபுரிந்துகொண்டிருக்கிறார்கள் என்று தயாரிப்பு நிறுவனம் அவரை சமாதானப்படுத்த முயன்று வருகிறது.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக்கொண்டு ‘800’ என்ற பெயரில் புதிய படம் உருவாகவுள்ளது. இந்தப் படத்தில் முத்தையா முரளிதரனாக விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார். எம்.எஸ்.ஸ்ரீபதி எழுதி இயக்குகிறார். தமிழில் உருவாகும் இந்தப் படம், உலகின் பல மொழிகளில் வெளியிடப்படவுள்ளது. தார் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை தெலுங்கு நடிகர் ராணா டகுபதியும்  இணைந்து தயாரிக்கவுள்ளார். 2020ஆம் ஆண்டு இறுதிக்குள் படத்தை வெளியிட படக்குழுவால் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஈழத் தமிழர்களுக்கு எதிராக செயல்பட்ட முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் தமிழரான விஜய் சேதுபதி நடிக்கக் கூடாதென சமூக வலைதளங்களில் குரல்கள் ஒலித்து வருகின்றன. பிறப்பால் தமிழரான முத்தையா முரளிதரன் 2009ஆம் ஆண்டு நிகழ்ந்த இனப்படுகொலைக்குப் பிறகு, இலங்கையில் சமத்துவமும் சமாதானமும் நிலவுகிறது என்றும் 20 வருடங்களாக இலங்கை கிரிக்கெட் அணியிலிருந்த தமக்கு ஒரு பிரச்சினையும் ஏற்படவில்லை எனவும் அப்போது கூறியுள்ளார். மேலும், போரை வெற்றிகரமாக முடித்த மகிந்த ராஜபக்சேவுக்கு நன்றி எனவும் தெரிவித்துள்ளார். இது ஈழத் தமிழர்கள் மத்தியில் வேதனையை உண்டாக்கியது.

விடுதலை சிறுத்தைகள் கட்சி வெளியிட்ட அறிக்கையில் “முரளிதரன் கண்டியில் பிறந்த தமிழராக இருந்தாலும் சிங்களராகவே வாழ்ந்து வருகிறார். விடுதலைப்புலிகள் போராடியபோது சிங்களர்கள் பக்கம் நின்று துரோகம் செய்தார். அவரது கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிப்பதை ஈழத்தமிழர்கள் ஏற்கமாட்டார்கள்” என்று கண்டித்தது.இன்னொரு பக்கம் சமீபத்தில் ஈழக் கவிஞர் தீபச்செல்வன் விஜய் சேதுபதிக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்திருந்தார். அதில், “விஜய் சேதுபதி, முத்தையா முரளிதரனின் பாத்திரத்தில் நடிப்பது, துரோகி கருணாவின் பாத்திரத்தில் நடிப்பதற்கு ஒப்பானது” எனக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், “மனத்தால் முழுக்க முழுக்க சிங்களவராக இருக்கும், சிங்கள அரசுக்குச் சாதகமாக இருக்கும், ஈழத் தமிழர்களுக்கும் அவர்களின் விடுதலைப் போராட்டத்துக்கும் எதிராக செயற்படும் முத்தையா முரளிதரனின் பாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிப்பது, நமது விரலைக் கொண்டே நமது கண்களைக் குத்தும் செயலாகும். அத்துடன், சிங்கள அரசுக்கும் முரளியின் கருத்துகளுக்கும் அது அங்கீகாரத்தை அளிக்கும். ஈழத் தமிழ் இனத்தை இன்னும் காயப்படுத்தும். ஈழ அழிப்புக்கு துணையாகும்” என விஜய் சேதுபதியைப் படத்திலிருந்து விலக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதே சமயம் எழுத்தாளர் ஷோபா சக்தி, தனது முகநூல் பக்கத்தில், ‘800’ படத்தில் விஜய் சேதுபதி நடிப்பது தொடர்பாக ஒரு பதிவை சில நாட்களுக்கு முன் இட்டுள்ளார். “இந்த 'லைகா' நிறுவனம் தமிழ்ப் படங்களைத் தயாரிப்பதற்கு எதிரான தமிழ் உணர்வாளர்களின் போராட்டம் என்னானது? லைகாவின் முதல் தயாரிப்பான 'கத்தி' படத்தின்போது கத்திக் கத்திப் பேசிய புரட்சியாளர்கள் இப்போது எங்கே? லைகாவின் 'செக்கச் சிவந்த வானம்' படத்தில் விஜய் சேதுபதி நடித்தபோது ஓர் எதிர்ப்பும் கிளம்பவில்லையே! இப்போது ரஜினி, கமல், சிவகார்த்திகேயன், சூர்யாவின் படங்கள் உட்பட ஒரே நேரத்தில் ஆறு படங்களைத் தயாரித்து தமிழ் சினிமாவை ஆள்கிறது லைகா. தமிழ் உணர்வாளர்களது கருத்தில் இப்போது ஏதாவது மாற்றம் வந்துள்ளதா? தமிழ் உணர்வு வட்டாரங்கள் இதைத் தெளிவுபடுத்திவிட்டு முத்தையா முரளிதரனின் படத்துக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுப்பதுவே வரவேற்கத்தக்கது. நீங்கள் அடிக்கடி போராட்ட உத்திகளை மாற்றிக்கொண்டிருப்பதால் பின்பற்ற சற்றுச் சிரமமாயுள்ளது” என பட எதிர்ப்பாளர்களை நக்கலடித்திருந்தார்.

பொதுவாக தன்னைச் சுற்றி சர்ச்சைகள் உருவாவதை விரும்பாத விஜய் சேதுபதி, முத்தையா முரளிதரன் வேடத்தில் நடிப்பதற்குக் கிளம்பியுள்ள எதிர்ப்புகளைக் கண்டு அச்சம் கொண்டுள்ளார். இதுவரை தன்னை தீவிர தமிழ் உணர்வாளர் என்ற அபிமானத்தில் தன்னை நேசிக்கும் ரசிகர்களின் வெறுப்புக்கு ஆளாக அவர் விரும்பவில்லை என்று தெரிகிறது. இதுகுறித்து படத்தயாரிப்பு நிறுவனத்துடன் கலந்து ஆலோசித்து வரும் அவர் ‘உங்கள் நிறுவனத்துக்கு வேறு ஒரு படம் நடித்துத் தருகிறேன். இதிலிருந்து என்னை விடுவித்துவிடுங்கள்’என்று வேண்டுகோள் வைக்கவிருப்பதாக அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.