தனுஷ்- வெற்றிமாறன் கூட்டணியில் படப்பிடிப்பின் இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கும் ‘அசுரன்’ படத்தில் ஒரு சிறப்புத் தோற்றத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாக வெளியாகிக்கொண்டிருக்கும் செய்திகளை படப்பிடிப்பு குழுவினர் மறுக்கின்றனர்.

எழுத்தாளர் பூமணியின் ‘வெக்கை’ நாவலை வெற்றிமாறன் திரைப்படமாக்கிவரும் ‘அசுரன்’ படப்பிடிப்பு கடந்த ஜனவரியில் தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது. தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கும் இப்படத்தில் தந்தை தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடிக்க, கருணாஸின் மகன் கென், இயக்குநர் பாலாஜி சக்திவேல்,பசுபதி ஆகியோர் முக்கியப் பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

இந்நிலையில் ‘அசுரன்’ படத்தில் நடிகர் விஜய் சேதுபதி முக்கியமான பாத்திரம் ஒன்றில் கவுரவ வேடத்தில் நடிப்பதாக கடந்த இரண்டு நாட்களாகவே செய்திகள் நடமாடி வந்தன. இச்செய்திக்கு விஜய் சேதுபதி தரப்பு மறுப்பு எதுவும் சொல்லாத நிலையில் இன்று படப்பிடிப்புக் குழுவுடன் தொடர்பு கொண்டு பேசியதில்’ படம் மூன்றாவது ஷெட்யூலாக அநேகமாக பூசணிக்காய் உடைக்கும் நிலைக்கு வந்துவிட்டது. இந்த நேரத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாக வெளியாகும் செய்திகளில் துளியும் உண்மை இல்லை’என்று தெரிவித்தனர்.