விஜய்சேதுபதி, த்ரிஷா நடிப்பில் சமீபத்தில் வெளியான '96 ' திரைப்படம் பள்ளி காதலையும், பள்ளி நினைவுகளையும் மீண்டும் பலருக்கு நினைவு படுத்தியது.

இந்த படத்தை ரசிகர்கள் மட்டும் இன்றி பல பிரபலங்களும் மனதார பாராட்டினர். மேலும் ராம், ஜானு கேரக்டரில் விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா இருவரும் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்ததாக கூறினர்.

மேலும் திரைப்படமும், வசூல் சாதனை படைத்தது.  இந்த நிலையில் '96' திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் பிரேம்குமாருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் நடிகர் விஜய்சேதுபதி.

இப்படி ஒரு மறக்க முடியாத படத்தை கொடுத்த இயக்குனரை கௌரவிக்கும் விதமாக ரூ.3 லட்சம் மதிப்புள்ள புல்லட் பைக் ஒன்றை வாங்கி கொடுத்துள்ளார் விஜய் சேதுபதி. அதுமட்டுமின்றி அந்த புல்லட்டுக்கு 0096 என்ற பதிவெண்ணையும் வாங்கி கொடுத்துள்ளார். விஜய் சேதுபதிக்கு புல்லட் என்றால் மிகுந்த விருப்பம் என்பதால் அதையே அவர் இயக்குனர் பிரேம்குமாருக்கு வாங்கி கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. 

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து,  இயக்குனர் பிரேம்குமார் தற்போது '96' திரைப்படத்தை தெலுங்கில் இயக்கி வருகிறார். இதில் ராம், ஜானு கேரக்டரில் சர்வானந்த் மற்றும் சமந்தா நடித்து வருகின்றனர்.