ஆசிய தடகளப் போட்டியில் தங்கம் வென்று தமிழகத்திற்குப் பெருமை சேர்த்த வீராங்கனை  கோமதி மாரிமுத்துவுக்கு நடிகர் விஜய் சேதுபதி ரூ. 5 லட்சத்திற்கான காசோலையை வழங்கி கவுரவப்படுத்தியுள்ளார்.

23வது ஆசிய தடகளப் போட்டிகள் தோகாவில் நடைபெற்றது. இதில் 800 மீட்டா் ஓட்டப்பந்தயத்தில் 30 வயதான தமிழகத்தைச் சோ்ந்த, இந்திய வீராங்கனை கோமதி மாாிமுத்து 2 நிமிடம் 2.70 விநாடிகளில் 800 மீட்டா் தூரத்தை கடந்து முதல் இடத்தை பிடித்தாா். இந்தியாவின் புதிய நம்பிக்கை நட்சத்திரமாக மாறியுள்ள வீராங்கனை கோமதி மாரிமுத்துவுக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். 

திரையுலகினர் அனைவரையும் முந்திக்கொண்டு காமெடி நடிகர் ரோபோ சங்கர் கோமதிக்கு ரூ.1 லட்சம் நிதி வழங்கியிருந்தார். அவரைத் தொடர்ந்து மக்கள் செல்வன் விஜய் சேதுபதியும் இன்று தனது மன்ற நிர்வாகிகள் மூலம் காசோலையை வழங்கியிருக்கிறார். மிகச் சமீபத்தில் துவங்கப்பட்ட எஸ்.பி.ஜனநாதனின் ‘லாபம்’ படப்பிடிப்பில் வெளியூரில் இருப்பதால் விஜய் சேதுபதியால் நேரில் வர முடியவில்லை’ என்ற அவரது நிர்வாகிகள் தெரிவித்தனர். அதே சமயம் செல்போனில் அழைத்து விஜய் சேதுபதி கோமதிக்கு வாழ்த்து தெரிவித்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.