நல்லவராக இருப்பதன் தர்ம சங்கடத்தைப் பட ரிலீஸ் சமயங்களில் தொடர்ந்து அனுபவித்து வரும் விஜய் சேதுபதிக்கு நாளை மறுநாள் ரிலீஸாக உள்ள ‘சங்கத் தமிழன்’படத்திலும் தயாரிப்பாளர் 2 கோடி ரூபாய் சம்பள பாக்கி வைத்திருப்பதாகவும் அதனால்தான் அவர் பட புரமோஷன்களில் கலந்துகொள்ளவில்லை என்றும் தகவல்கள் வருகின்றன.

விஜயா புரடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் விஜய் சந்தர் இயக்கியிருக்கும் படம் ‘சங்கத்தமிழன்’.இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ராஷி கன்னா நிவேதா பெத்துராஜ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். தீபாவளிக்கே ரிலீஸாகியிருக்கவேண்டிய இப்படம் போதிய தியேட்டர்கள் கிடைக்காததாக் தள்ளிக்கொண்டே போனது. இந்நிலையில் நாளை மறுதினம் ரிலீஸாக உள்ள நிலையில் படத்தின் புரமோஷன் தொடர்பான நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவோ, படம் தொடர்பாக ஊடகங்களுக்கு பேட்டி தரவோ சம்மதிக்காமல் விஜய் சேதுபதி அடம்பிடித்து வருகிறார்.

இதற்கான காரணத்தை விஜய் சேதுபதி வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை எனினும் அவரது நண்பர்கள் வட்டாரத்தில் விசாரித்தபோது, படத்தின் பட்ஜெட் எதிர்பார்த்ததை விட அதிகரித்ததால் வழக்கம்போல் தயாரிப்பாளர் தரப்பு அந்த சுமையை விஜய் சேதுபதி மேல் ஏற்றி அவருக்கு ஃபைனல் செட்டில்மெண்டாக சென்று சேரவேண்டிய 2 கோடி ரூபாயைத் தராமல் இழுத்தடிப்பதாகக் கூறப்படுகிறது. தனக்கு அடிக்கடி இவ்வாறு நடப்பதால் இந்த முறையாவது எதிர்ப்பைப் பதிவு செய்தே தீரவேண்டும் என்ற முடிவில்தான் படம் குறித்து சுத்தமாக வாயைத் திறக்காமல் இருக்கிறாராம் விஜய் சேதுபதி. அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் படத்தின் நாயகிகளும் புரமோஷன் நிகழ்ச்சிகளை தவிர்க்க முடிவு செய்திருக்கிறார்களாம்.