திரையுலகில் தனக்கு ஏற்படும் நெருக்கடிகளைச் சமாளிக்க ஆளுங்கட்சியினரின் ஆதரவு தேவை என்பதை சற்று தாமதமாகப் புரிந்துகொண்ட நடிகர் விஜய் சேதுபதி, இன்று தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மா.பா.பாண்டியராஜனை சந்தித்து நீண்ட நாள் பெண்டிங்கில் இருந்த தனது கலைமாமணி விருதைப் பெற்றுக்கொண்டார்.

கடந்த 8 ஆண்டுகளாக தமிழக அரசால் வழங்கப்படாமல் இருந்த கலைமாமணி விருதுகள் ஆகஸ்ட் மாதத்தில் முதல்வர் எடப்பாடியால் வழங்கப்பட்டன. ஒரே நேரத்தில் 200 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்ட அவ்விழாவில் அப்போது படு பிசியாக இருந்த விஜய் சேதுபதியால் கலந்துகொள்ள முடியவில்லை. இந்நிலையில் இன்று ரிலீஸாகியிருக்கவேண்டிய அவரது ‘சங்கத்தமிழன்’படம் சங்கு நெறிக்கப்பட்டு ரிலீஸாகாமல் கிடக்கும் நிலையில் ஆளுங்கட்சியின் ஆதரவை வேண்டியே கலைமாமணி வாங்கும் ரூட்டை விஜய் சேதுபதி கையில் எடுத்திருப்பதாகத் தெரிகிறது.

அமைச்சரைச் சந்தித்து விட்டு வெளியே வந்த விஜய் சேதுபதியிடம் நிருபர்கள் கேள்வி கேட்க முயன்றபோது ‘ஏற்கனவே வாங்காத கலைமாமணியை இப்ப வாங்க வந்திருக்கேன்’என்பது தாண்டி எந்தக் கேள்விக்கும் பதில் சொல்லாமல் படு அலட்சியமாகக் கிளம்பிச்சென்றார். ‘மாண்டி’ விளம்பரப் படத்தில் நடித்தது குறித்தும் ‘சங்கத் தமிழன்’ ரிலீஸாகாதது குறித்தும் சிலர் கேள்வி எழுப்ப முயன்றபோது லைட்டாக எரிச்சலடைந்த வி.சே.’இந்தக் கேள்வியை எங்கிட்ட ஏன் கேக்குறீங்க’என்றபடி பத்திரிகையாளர்களைப் பொருட்படுத்தாமல் ஒரு ரஜினி நெனப்பில் தெனாவட்டாக நகர்ந்தார்.