மதுரையில் நடைபெற்ற ஜோய் ஆலுக்காஸ் நகைக்கடை திறப்பு விழாவுக்கு பிரபல தொகுப்பாளினியுடன் நடிகர் விஜய் சேதுபதி தனி விமானத்தில் சென்ற புகைப்படங்கள் வலைதளங்களில் வைரலாகின்றன.

விளம்பரப்படங்கள், கடைத் திறப்பு விழா நிகழ்ச்சிகளில் அவ்வளவாக ஆர்வம் காட்டாத நடிகர் விஜய் சேதுபதி நேற்று மதுரையில் நடந்த ஜோய் ஆலுக்காஸ் பிரம்மாண்ட நகைக்கடை திறப்பு விழாவில் கலந்துகொண்டு அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்.

 நகைக்கடை திறப்பு விழாவில் கலந்து கொண்ட விஜய் சேதுபதியிடம் தேர்தலுக்குப் பின் தமிழக அரசியலில் மாற்றம் வருமா என்ற கேள்வியை செய்தியாளர்கள் முன்வைத்தனர். அதற்கு பதிலளித்த அவர், “நல்லது நடந்தே தீரும் என்ற நம்பிக்கையில் நானும் உங்களைப் போலவே வாக்களித்து விட்டு காத்திருக்கிறேன். எப்போதும் மாற்றம் வேண்டும். அது அவசியமானது’ என்று பரபரப்பு கிளப்பியிருந்தார்.

இந்நிலையில் அந்நிகழ்ச்சிக்கு விஜய் சேதுபதி தனி விமானத்தில் பயணம் செய்திருந்ததை பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளினி தியா தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். தியாவும் விஜய் சேதுபதியும் எடுத்துக்கொண்ட செல்ஃபி படங்கள் சிலவற்றையும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இப்படங்கள் வலைதளங்களில் வைரலாகிவருகின்றன.