டோலிவுட் இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் பெயரிடப்படாத பான் இந்தியா படத்தின் அப்டேட் வெளியாகி உள்ளது.

Vijay Sethupathi Movie Update : தமிழ் நடிகர் விஜய் சேதுபதியை நாயகனாகக் கொண்டு, சூப்பர் ஹிட் தெலுங்கு இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கும் பான் இந்தியன் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பில், நாயகன் விஜய் சேதுபதி, தயாரிப்பாளர் சார்மி கவுர், இயக்குனர் பூரி ஜெகன்நாத் ஆகியோர் உரையாடும் ஒரு அழகான வீடியோவை வெளியிட்டு படக்குழுவினர் இந்த தகவலை அறிவித்துள்ளனர். பூரி கனெக்ட்ஸ் பேனரில் பூரி ஜெகன்நாத் மற்றும் சார்மி கவுர், ஜேபி மோஷன் பிக்சர்ஸ் பேனரில் ஜேபி நாராயண் ராவ் ஆகியோர் இணைந்து இந்த பிரம்மாண்ட பான் இந்தியன் படத்தை தயாரிக்கின்றனர். சம்யுக்தா மேனன் இப்படத்தின் நாயகியாக நடிக்கிறார்.

இயக்குனர் பூரி ஜெகன்நாத்தையும், படத்தின் ஒட்டுமொத்த குழுவையும் மிஸ் செய்வதாக விஜய் சேதுபதி வீடியோவில் பேசியுள்ளார். இத்தனை நாட்களில் அனைவருடனும் ஏற்பட்ட உணர்வுப்பூர்வமான பிணைப்பு குறித்து தயாரிப்பாளர் சார்மி கவுர் மற்றும் இயக்குனர் பூரி ஜெகன்நாத் ஆகியோரும் பேசினர். பூரி ஜெகன்நாத்தின் ஜாக்கெட் குறித்து நகைச்சுவையாகப் பேசி விஜய் சேதுபதி வீடியோவில் சிரிப்பலையை ஏற்படுத்தினார்.

விஜய் சேதுபதி படத்தின் அப்டேட்

பாலிவுட் நடிகை தபு மற்றும் கன்னட நடிகர் விஜய் குமார் ஆகியோர் இப்படத்தின் மற்ற முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். பிரம்மாஜி, விடிவி கணேஷ் ஆகியோரும் இப்படத்தின் நட்சத்திர பட்டாளத்தில் உள்ளனர். இப்படத்தின் முதல் ஷெட்யூல் ஜூலை மாதம் ஹைதராபாத்தில் தொடங்கியது. தேசிய விருது பெற்ற ஹர்ஷவர்தன் ராமேஷ்வர் இப்படத்திற்கு இசையமைக்கிறார். அர்ஜுன் ரெட்டி, கபீர் சிங், அனிமல் போன்ற சூப்பர் ஹிட் படங்களுக்கு இசையமைத்த ஹர்ஷவர்தன் ராமேஷ்வர், பல தென்னிந்திய படங்கள் மூலம் கவனம் ஈர்த்த இசையமைப்பாளர் ஆவார்.

ஆக்‌ஷன், எமோஷன், மாஸ், இசை, காமெடி என அனைத்தும் கலந்த ஒரு மெகா பட்ஜெட் படமாக இது உருவாகிறது. பூரி ஜெகன்நாத் தனது பேனரில் மிகப்பெரிய படமாக இதை உருவாக்குகிறார். படத்தை அவரே எழுதி இயக்கியுள்ளார். படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாகும். அதன்பிறகு படத்தின் விளம்பரப் பணிகளைத் தொடங்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். பான் இந்தியன் படமாக தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது. எழுத்து, இயக்கம் - பூரி ஜெகன்நாத், தயாரிப்பாளர்கள் - பூரி ஜெகன்நாத், சார்மி கவுர், ஜேபி நாராயண் ராவ்.