மெகா இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை சட்னியாக்கிய இந்த விவாகரத்தில் ‘மிஸ்டர் நேர்மை’யாக நடந்து கொண்டதன் மூலம் இந்திய அளவில் ஏற்கனவே ‘சிறந்த திரைக்கதை ஆசிரியர்’ எனும் பெயர் பெற்றிருந்த கே.பாக்யராஜ், மீண்டும் பிரபலமாகி இருக்கிறார். 

அதிலும், எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் பதவியை ராஜினாமா செய்திருப்பது, அவரை எங்கேயோ கொண்டு போய் நிறுத்தியுள்ளது. கதை பஞ்சாயத்தில் அதிரடி தீர்ப்பை வழங்கியவர், ராஜினாமா செய்வார் என்று அந்த சங்கத்தினுள் இருந்த சிலராலேயே ஜீரணிக்க முடியவில்லையாம். இத்தனைக்கும் அவர்கள், முருகதாஸுக்கு பாதகமான தீர்ப்பை பாக்யராஜ் எழுதியபோது உம்முன்னு! இருந்து, எதிர்தரப்பில் எல்லாவற்றையும் ஜம்முன்னு போட்டுக் கொடுத்ததன் மூலம் இப்போது பேங்க் பேலன்ஸை கும்முன்னு ஏற்றிக் கொண்டவர்களாம். 

பஞ்சாயத்தில் பாக்யராஜின் முடிவு, எதை நோக்கிப் போகிறது என்பது பற்றி அடிக்கடி முருகதாஸ் தரப்புக்கு லைவ் கமெண்ட்ரி கொடுத்ததன் மூலம் அவரது குட் புக்கில் இடம்பெற்றவர்களுக்கே பாக்கியின் இந்த முடிவு பேரதிர்ச்சியை தந்ததோடு, சற்றே மன நெருடலையும் தந்துவிட்டதாம். ’நீதி ஜெயிக்கணும், நேர்மை காக்கணும், வில்லன் அழியணும்! அப்படின்னெல்லாம் படமெடுக்குற நம்மளே இப்படி யதார்த்த வாழ்வில் எதிர்மறையா நடக்கலாமா?’ என்று தங்களுக்குள் கூடிப் பேசி வருந்துகிறார்களாம். 

இருந்தாலும் பாக்யராஜ் வருத்தப்பட்டு, ராஜினாமா செய்த பிறகு இந்த ஆதங்கத்தினால் எந்த பயனுமில்லைதான். ‘உங்கள் ராஜினாமாவை நாங்க ஏற்கவில்லை’ என்று அவரிடம் சிலர் சொல்லிப் பார்த்துவிட்டார்கள். ஆனால் எந்த பலனுமில்லையாம். எனவே, வருத்தப்படும் இயக்குநர்களும் கூடிய சீக்கிரம் தங்கள் பதவியை ராஜினாமா செய்து பாக்கியராஜூக்கு ஆதரவு தெரிவிப்பார்கள்! என்று தகவல். 
கூடிய விரைவில் தேர்தல் நடந்தால் கூத்துக்களுக்கு பஞ்சமிருக்காது!

இதையெல்லாம் தாண்டி ஒரு ஹைலைட் என்னவென்றால், சர்கார் கதை விவகாரத்தில் தீர்ப்பு சொல்லி, சமரசமாகி, படமே ரிலீஸாகிவிட்டது. ஆனாலும் இன்னமும் இந்த சங்கத்தினுள் நடக்கும் போக்குவரத்துக்களை நடிகர் விஜய்க்கு சிலர் துளி மாறாமல் அப்டேட் செய்கிறார்களாம். 
விஜய் ஏன் இந்த சங்க விஷயத்தில் இவ்வளவு கவனம் செலுத்துகிறார்? என்பதுதான் பெரிய கேள்வியாக உள்ளது மெகா இயக்குநர்களுக்கு.