கிறிஸ்மஸ் வாழ்த்து சொல்வதற்காக பத்திரிகையாளர்களை ஒட்டுமொத்தமாக சந்தித்த விஜய், அவர்களுக்கு வாழ்த்துச் சொன்ன கையோடு தலா ஒரு கோல்டு காய்ன் கொடுத்ததுதான் இப்போதைக்கு இண்டஸ்ட்ரியின் ஹாட் டாபிக். அப்பல்லோ ஹாஸ்பிடலில் அம்மா ஒரு கோடி ரூபாய்க்கு ஒரு இட்லி சாப்பிட்ட செய்தியை விட இதற்கு சிலர் அதிக அதிர்ச்சி காட்டுவதெல்லாம் நடக்கிறது.

இது சரியா,தவறா என்பது குறித்த விமர்சனங்கள் ஒரு பக்கம் இருக்கட்டும். அவரது போட்டியாளரான அஜீத் பத்திரிகையாளர்களைச் சந்தித்து எத்தனை ஆண்டுகள் ஆகின்றன என்கிற விபரம் தெரிந்தால் அப்படியே ஷாக் ஆகிடுவீங்க.

மீடியாவுக்கு விஜயை விட அதிக நன்றிக்கடன் பட்டவர் உண்மையில்  அஜீத் தான். ஏனெனில் தந்தையின் பின்னணியை வைத்துக்கொண்டு வந்ததாக துவக்கத்தில் கடுமையாக கலாய்க்கப்பட்டார் விஜய். ஒரு முன்னணி இதழ் அவர் நடித்த படத்தின் சினிமா விமர்சனத்தில் சுட்டுப்போட்ட ரொட்டி மூஞ்சி என்பதுபோல எழுத, விஜய் ரசிகர்கள் அப்பத்திரிகை அலுவலக வாசலில் போராட்டம் நடத்திய கூத்தெல்லாம் கூட நடந்தது.

ஆனால் முற்றிலும் நேர்மாறாக அஜீத்தை துவக்கத்திலிருந்தே பத்திரிகைகள் ஆரத்தி எடுத்து வரவேற்றன. எந்தப் பின்புலமும் இல்லாமல் சொந்தக்காலில் ஜெயித்தவர் என்று உச்சி முகர்ந்தன. துவக்கத்தில் பதிலுக்கு பத்திரிகையாளர்களிடம் அஜீத்தும் நன்றி பாராட்டவே செய்தார்.

ஆனால் என்ன காரணத்தாலோ கடந்த 2010ம் ஆண்டோடு பத்திரிகையாளர்களை செய்தி நிமித்தமாகச் சந்திப்பதைக் கூட அஜீத் முற்றிலுமாக நிறுத்திக்கொண்டார். அதற்கு முன்பு பத்திரிகையாளர்கள் யாராவது நோய்வாய்ப்பட்டாலோ, மரணமடைந்துவிட்டாலோ முதல் ஆளாக நிற்கும் அஜீத் இந்த எட்டு ஆண்டுகளில் மீடியாவைச் சேர்ந்த ஒரே ஒரு ஜீவனைக் கூட சந்தித்ததாகத் தகவல் இல்லை. ஒரு மவுண்ட் ரோடு வார இதழ் மட்டும் போதும் என்பது அவரது கணக்கு.