‘சர்கார்’ படத்துக்குப் பின் அட்லியுடன் நடிகர் விஜய் இணையும் மூன்றாவது படத்தில் அவர் பெண்கள் கால்பந்தாட்டக்குழுவின் கோச் ஆக நடிக்கவிருப்பதாக புரடக்‌ஷன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

’தெறி’,’மெர்சல்’ படங்களுக்குப் பின் அட்லி,விஜய் இணையும் மூன்றாவது படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. ‘சர்கார்’ பஞ்சாயத்துகளுக்கு சற்றும் அஞ்சாத விஜய் மீண்டும் ஒரு அரசியல் படத்தில் நடிக்கவிருப்பதாகச் சொல்லப்பட்டது. ஆனால் அது அரசியல் படமல்ல. பெண்கள் கால்பந்தாட்டத்தையும், அந்த விளையாட்டில் நடக்கும் வில்லத்தனங்களையும் மையமாகக் கொண்ட படம் என்ற தகவல் தற்போது லீக்காகியுள்ளது.

இப்படத்தில் விஜய் அக் கால்பந்தாட்டக்குழுவின் கோச் ஆக நடிக்கிறார். இப்படத்துக்காக கால்பந்து ஆடத்தெரிந்த 16 அழகிகளை அட்லி ஏற்கனவே ஆடிஷன் செய்து வைத்திருக்கிறார்.

சமீபத்தில் வெளியான சிவகார்த்திகேயனின் ‘கனா’ படத்தில் அவர் பெண்கள் கிரிக்கெட் குழுவின் கோச் ஆக நடித்திருந்த நிலையில், உடனே இன்னொரு கோச் கேரக்டரில் விஜய் நடிப்பது ஆச்சரியமான தகவல் என்றாலும், இப்படத்தை இயக்கவிருப்பவர் அட்லி என்பதால் வெளிநாட்டு மொழிகளில் வந்த கால்பந்தாட்டப் படங்களைப் பற்றிய தகவல்களை இப்போதே சேகரிக்க ஆரம்பித்தால் அட்லி எங்கிருந்து எத்தனை சீன்களைச் சுட்டார் என்று புட்டுப்புட்டு வைக்க ஏதுவாக இருக்கும்.