விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் பெயரிடப்படாத படம் ஒன்றில் நடித்து வருகிறார். சென்னை, மதுரையில் படமாக்கப்பட்ட இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு ஐரோப்பாவில் நடந்து வருகிறது.

இப்படத்தில் மூன்று கதாபாத்திரங்களில் நடிக்கும் விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் நடித்து வருகின்றனர். மேலும், சத்யராஜ், வடிவேலு, சத்யன் உள்ளிட்டோரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இயக்குநரும், நருகருமான எஸ்.ஜே.சூர்யா இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார். இந்நிலையில் ஹரீஷ் பேரடியும் இப்படத்தில் இணைந்திருக்கிறார்.

ஆக நட்சத்திரப் பட்டாளமே களமிறங்கி இருக்கும் இப்படத்தை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தனது 100-வது படமாக பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. இப்படத்திற்கு `இசைப்புயல்’ ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார்.

இதில் விஜய் நடிக்கும் மூன்று கதாபாத்திரங்களில் ஊர் தலைவர், மருத்துவர் என்ற இரு கதாபாத்திரங்கள் குறித்த தகவல் நாம் அறிந்ததே. இந்நிலையில், விஜய்யின் மூன்றாவது கதாபாத்திரம் என்னவென்பது ரகசியமாக வைக்கப்பட்டிருந்த நிலையில், அந்த கதாபாத்திரம் குறித்த தகவலும் தற்போது கசிந்துள்ளது. அதாவது மூன்றாவது கதாபாத்திரத்தில் விஜய் ஒரு மேஜிக் கலைஞராக நடித்து வருகிறாராம். இந்த மேஜிக் விஜய்க்கு சமந்தா ஜோடி என்றும் கூறப்படுகிறது.

விஜய் 61 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், விஜய் பிறந்தநாளை முன்னிட்டு வருகிற ஜுன் 22-ஆம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து படம் தீபாவளிக்கு ரிலீசாக இருக்கிறது.