'மாநகரம்', 'கைதி' போன்ற படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது விஜய் நடித்து வருகிறார். அந்தப் படத்திற்கு தற்காலிகமாக "தளபதி 64" என பெயரிடப்பட்டுள்ளது. படத்தில் விஜய்க்கு ஜோடியாக 'பேட்ட' புகழ் மாளவிகா மோகனன் நடிக்கிறார். வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி களம் இறங்குகிறார். இந்தப்படத்தில் ஆண்ட்ரியா, சாந்தனு, ஸ்ரீமன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். 

'தளபதி-64' படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் சென்னையில் முடிந்த நிலையில், 2-வது கட்ட ஷூட்டிங் கடந்த நவம்பர் 1ம் தேதி டெல்லியில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. டெல்லியில் உள்ள பிரபல கல்லூரிகள் மற்றும் நொய்டாவில் உள்ள மார்க்கெட் பகுதிகளில் படத்தின் ஷூட்டிங்கை நடத்த படக்குழு திட்டமிட்டது.  40 நாட்கள் நடைபெறும் இந்த ஷெட்யூலில், விஜய் மற்றும் விஜய்சேதுபதி பங்கேற்கும் சண்டைக் காட்சிகளும் படமாக்க திட்டமிடப்பட்டிருந்தது. 

சமீபத்தில், ஒரு கல்லூரியில் விஜய்யின் ஓபனிங் பாடலை மிக பிரம்மாண்டமாக படக்குழுவினர் படமாக்கி வந்தனர். 300 டான்ஸர்கள் பங்கேற்ற பிரம்மாண்ட ஓபனிங் சாங் பாடலில், விஜய் பங்கேற்ற புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி செம வைரலானது. 

இதனிடையே, டெல்லியில் ஏற்பட்டுள்ள கடும் காற்று மாசு காரணமாக, அங்கு மோசமான சூழல் நிலவி வருகிறது.அங்குள்ள மக்கள் சுவாசிக்கவே சிரமப்பட்டு, பெரும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். அதில் தளபதி-64 படக்குழுவும் விதிவிலக்கல்ல.கடும் காற்று மாசு காரணமாக, வெளிப்புறங்களில் படப்பிடிப்பை நடத்த முடியாமல் படக்குழுவினர் சிக்கித்தவித்து வந்தனர். இதனால் படக்குழு பேக்கப் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதனையடுத்து செட்டை விட்டு அனைத்து நடன கலைஞர்களும் வெளியேறிய நிலையில், சிலர் மட்டும் இருந்துள்ளனர். அப்போது படப்பிடிப்பு தளத்திற்கு வந்த விஜய், அவர்களைப் பார்த்து கிரிக்கெட் விளையாடலாமா எனக் கேட்டுள்ளார். முதல் மேட்சில் சிறிது தயக்கத்துடன் விளையாடிய விஜய், அடுத்த மேட்சில் அதகளம் செய்துள்ளார். விஜய்யுடன் ஜாலியாக கிரிக்கெட் விளையாடிய நடனக்கலைஞர் சதாம் என்பவர் வெளியிட்டுள்ள இந்த தகவல் தீயாய் பரவிவருகிறது.