விஜய், ஜெயலலிதா காலில் விழுந்து அடிபணிந்த பழைய புகைப்படங்களை ‘இன்னைக்கு அரசியல் பேசும் விஜய் இப்படித்தான் ஜெயலலிதா காலில் விழுந்து கிடந்தார்’’ என சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.  நடிகர் விஜய்க்கும் அதிமுகவுக்கும் இடையே இதுவரை நடந்த அரசியல் சம்பவங்களில் ஜெயலலிதா காலத்தில் மட்டுமல்ல இதற்கு முன் வெளியான சர்கார் படத்திலும் கூட விஜய் அடங்கிப் போனது தான் வரலாறு.  

2009- ம் ஆண்டு ஜூலை 26ம் தேதி விஜய் ரசிகர் மன்றம், விஜய் மக்கள் இயக்கமாக மாறியது. உடனே அவரை தங்கள் பக்கம் இழுத்துப்போட பல கட்சிகளும் பகிரத முயற்சிகளை மேற்கொண்டனர். அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் காங்கிரஸைச் சேந்த ராகுல் காந்தியை ரகசியமாக சந்தித்துவிட்டு வந்தார் விஜய். அப்போது காங்கிரஸ் தலைவர்கள் அறிவித்தபடி, விஜய் காங்கிரஸில் சேர்ந்திருந்தால் அந்த ஆண்டு இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலையினால் காங்கிரஸ் கட்சியின்மீது விழுந்த கரை விஜய்யின் வெள்ளை சட்டையின்மீதும் படிந்திருக்கும். ஆனால், அவர் செய்த தாமதத்தால் கரைபடாமல் தப்பித்துக் கொண்டார். 

அடுத்து 2011 -ம் ஆண்டு அண்ணா ஹசாரேவை சந்தித்தார். இது மீண்டும் விஜய்யின் மீதிருந்த அரசியல் ஆர்வத்தை காட்டியது.  இரண்டு ஆண்டு மக்கள் இயக்கப் பணி விஜய் ரசிகர்களிடத்திலேயும் ஒரு மாற்றத்தை, முதிர்ச்சியைக் கொண்டுவந்திருந்தது.  ‘தளபதியே வா... தலைமை ஏற்க வா..!’ என்றெல்லாம் போஸ்டரை அடித்து காவலன், வேலாயுதம் படங்களை அமர்க்களப்படுத்தினார்கள். விஜய்யின் தொடர் அரசியல் நடவடிக்கைகளும், ரசிகர்களின் தளபதி  மாற்றமும் அரசியல் கட்சிகளால் உற்றுக் கவனிக்கப்பட்டன. அப்போது ஆட்சியிலிருந்தது அ.தி.மு.க.,வாக இருந்தாலும், தி.மு.க.,வின் சார்பிலிருந்து தளபதி என்ற பட்டப்பெயருக்கு எதிர்ப்பு கிளம்பியது.

கடந்த 2011ம் ஆண்டு தேர்தல் சமயத்தில் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து நடிகர் விஜயும், அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரும் அ.தி.மு.கவிற்கு ஆதரவு தெரிவித்தனர். விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் அ.தி.மு.க வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரத்திலும் ஈடுபட்டார். 50 தொகுதிகளில் விஜய் ரசிகர்களின் களப்பணி தேவை என்று அ.தி.மு.க தரப்பில் இருந்து எஸ்.ஏ.சிக்கு ஒரு லிஸ்ட் கொடுக்கப்பட்டது.

அ.தி.மு.க கொடுத்த 50 தொகுதிகளிலும் தி.மு.க கூட்டணி வேட்பாளர்களுக்கு எதிராக விஜய் ரசிகர்கள் தீயாக வேலை பார்த்தனர். இந்த 50 தொகுதிகளில் சுமார் 43 தொகுதிகளில் அ.தி.மு.க கூட்டணி வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து தேர்தல் முடிவு வெளியாகி ஜெயலலிதா முதலமைச்சராக பதவி ஏற்றார். அப்போது போயஸ் கார்டன் சென்று ஜெயலலிதாவிற்கு வாழ்த்து தெரிவித்துவிட்டு விஜயும், சந்திரசேகரும் வெளியே வந்தனர்.

அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த விஜய், ஜெயலலிதா முதல்வராவதற்கு ஒரு அணிலாக தான் உதவியது மகிழ்ச்சி அளிப்பதாக பேட்டி அளித்தார். அதனை தொடர்ந்து பட விழா ஒன்றில் நடிகர் விஜய் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் பேசிய சீமான், ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திவிட்டு தம்பி விஜய் அமைதியாக அமர்ந்திருப்பதாக கொளுத்தி போட்டுவிட்டு சென்றார்.

அதன் பிறகு தான் விஜய் தரப்புக்கும் – ஜெயலலிதாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. தனது வெற்றிக்கு விஜய் உதவியதாக கூறியதை ஜெயலலிதாவால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.  இதனால், தயாரிப்பாபளர் சங்க தலைவர் பதவியில் இருந்து எஸ்.ஏ.சந்திரசேகரை நீக்கும் உள்ளடி வேலையை ஆரம்பித்தது அ.தி.மு.க. அடுத்து விஜய் நடித்த வேலாயுதம் திரைப்படத்தை ஜெயா டி.வி அடிமாட்டு விலைக்கு கேட்டது.

ஏ.எம்.ஜெயின் கல்லூரியில் விஜய்யின் 2013ஆம் ஆண்டு பிறந்த நாளுக்காக தயார் செய்யப்பட்டுக் கொண்டிருந்த மேடைகளைத் தாக்கியது. பிறந்த நாள் விழாவுக்கு ஜெயின் கல்லூரி திடீரென அனுமதி மறுக்க, பிறந்த நாள் கொண்டாட்டங்கள் பின்வாங்கப்பட்டன.

வேறு வழியே இல்லாமல் வேலாயுதம் படத்தை அடிமாட்டு விலைக்கு விற்கவேண்டிய நிலை விஜய்தரப்புக்கு உருவானது. அதன் பிறகு விஜய் நடிப்பில் வெளியான நண்பன் படத்தையும் ஜெயா டி.வி., வாங்க விரும்பியது. ஆனால், நண்பன் படம் விஜய் டிவி கைப்பற்றியது. இதனால் தான் விஜய் நடிப்பில் துப்பாக்கி திரைப்படம் வெளியாக இருந்த போது இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன.

இஸ்லாமிய அமைப்புகளின் பின்னணியில் அ.தி.மு.க மேலிடம் இருப்பது அப்போது வெளிச்சத்துக்கு வந்தது.  இருந்தாலும் கூட இந்த முறை விஜய் தரப்பு இறங்கிவரவில்லை. துப்பாக்கி படத்தின் சேட்டிலைட் உரிமையையும் விஜய் டி.வி.,க்கே விற்பனை செய்தது. இந்த நிலையில் தான் விஜய் தலைவா படத்தில் நடித்தார். அந்த படத்தில் விஜய் அரசியல் பேசுவதும், டைம் டூ லீட் என்கிற சப் டைட்டிலுடன் படம் வெளியாக இருப்பதும் அ.தி.மு.கவிற்கு எரிச்சலை ஏற்படுத்தியது.

தலைவா திரைப்படத்தின் ரிலீஸுக்கும் ஆபத்து. ஆளும் அரசாங்கத்தை எதிர்த்துக்கொண்டு தலைவா படத்தை வாங்க எந்தச் சேனலும் முன்வராத நிலையில் சன் டி.வி. வாங்கியது. இது இன்னும் இடியாப்பச் சிக்கலை ஏற்படுத்தியது. தலைவா படத்தை திரையிட்டால் தியேட்டர்களை தாக்குவோம் என மிரட்டல் வந்ததால் எந்தத் தியேட்டரிலும் படம் ரிலீஸாகாது என்று சொல்லிவிட்டனர். இந்த நிலையில், விஜய்யும், தலைவா தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயினும் கொடநாடு வரை சென்று அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க முடியாமல் திரும்பி வந்தார்கள்.

அதன் பிறகு சென்னை திரும்பி ஜெயலலிதாவுக்கு உருக்கமான ஒரு வீடியோ வெளியிட்டு பிரச்சனையை முடித்தார் விஜய்.  சென்னை திரும்பிவந்த விஜய், ஜெயலலிதாவின் ஆட்சியில் செய்தவையென சில திட்டங்களைச் சொல்லி, தியேட்டர்களுக்குப் பாதுகாப்பு கொடுங்கள் என ஒரு கோரிக்கையை வைத்திருந்தார். அதன்பிறகுதான் ஒரு வழியாக தலைவா ரிலீஸானது. 

அதன் பிறகு விஜய் ஜெயலலிதாவுடன் எந்த வம்புக்கும் செல்லாமல் பெட்டிப்பாம்பாக அடங்கிப் போனார்.  ஜெயலலிதாவும், விஜயை பெரிதாக கண்டுகொள்ளவில்லை. கடந்த 2016ம் ஆண்டு ஜெயலலிதா காலமாகிவிட்டார். அதன் பிறகு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் தனது மண்ணில் நின்று போராடியது. அப்போது அவரது ரசிகர்களையே வியக்கவைத்தார் விஜய். ’’இது சம்மந்தமா கைது செய்தவர்களை வெளிய அனுப்பீட்டா நான் சந்தோஷப்படுவேன்... இவ்வளவுக்கும் காரணமான அமைப்பை வீட்டுக்கு அனுப்பீட்டா... நான் சந்தோஷப்படுவேன்’’என்று பன்ச் வசனம் பேசிப் பகடி செய்திருந்தார்.

அடுத்து நடைபெற்ற பிஹைண்டுவுட்ஸ் கோல்டு மெடல் விருதுகள் விழாவில், ’நல்லரசா இருங்க. அப்பறம் வல்லரசா இருக்கலாம்’ என தமிழக விவசாயிகளின் பிரச்னையில் பாராமுகமாக இருக்கும் மத்திய அரசுக்கு அறிவுரை சொல்லியிருந்தார். மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி வரி உள்ளிட்ட விவகாரங்களை கிளப்பி கடும் எதிர்ப்பை வாங்கிக் கட்டிக் கொண்டார்.

 

அடுத்து சர்கார் படத்தின் கதையில், மறைந்த ஜெயலலிதா ஆட்சி புரிந்த காலத்தில் அளிக்கப்பட்ட இலவச திட்டங்கள் குறித்தும், தமிழக அரசு குறித்தும் சர்ச்சை காட்சிகள் இருப்பதாக அதிமுக குற்றம்சாட்டியது. வில்லிக்கு ஜெயலலிதாவின் இயற்பெயரான கேமாளவல்லி என்று பெயர் சூட்டி தனது ஆத்திரத்தை தீர்த்துக் கொண்டார். எனவே அந்த காட்சிகளை அமைத்த இயக்குநர், படக்குழுவினர் மற்றும் சர்கார் படத்தையே கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக-வினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  சர்கார் படத்தில் இருந்து சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்ட பின் படத்தை ரிலீஸ் செய்தனர்.  

அதன் பிறகு அவர் அரசியல் பேசியது பிகில் பட இசை விழாவில் அரசியல் பேசி அதிமுகவினரை வம்பிழுத்து இருக்கிறார்.  ஜெயலிதா உயிரோடு இருந்த போது அவரிடம் கெஞ்சி வெளியிட்ட வீடியோவில் கூட விஜய் கைகளைகட்டிக் கொண்டு தான் நிற்பார். விஜய் ஜெயலலிதா காலில் விழுந்த புகைப்படங்களும் உள்ளன. ஆனால், ஜெயலலிதா மறைந்த பிறகு வீரவசனம் பேசுவது கோழைத்தனம் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.