பிரபல நடிகை இஷா கோபிகர், பாஜக கட்சியில் இணைந்த முதல் நாளே பெண்கள் போக்குவரத்து பிரிவின் செயல் தலைவர் என்ற பதவியை ஏற்றுள்ளார். இதற்க்கு பலர் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.

தமிழில் கடந்த 1998 ஆம் ஆண்டு 'காதல் கவிதை' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை இஷா கோபிகர். அறிமுகமான முதல் படத்திலேயே, சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதைப் பெற்றார்.

இந்த படத்தை தொடர்ந்து, அரவிந்த் சுவாமியுடன் 'என் சுவாச காற்றே' விஜய்யுடன் 'நெஞ்சினிலே', விஜயகாந்துடன் 'நரசிம்மா' ஆகிய படங்களில் நடித்தார்.

திரைப்படங்கள் நடிக்க துவங்கிய ஒரு சில ஆண்டுகளிலேயே தன்னுடைய அழகால் ரசிகர்களை கவர்ந்த இஷா, பின் கன்னடம் இந்தி ஆகிய மொழி படங்களிலும் பிஸியானார்.

ஒரு நிலையில் முழுநேர இந்தி பட நடிகையாக மாறினார். முன்னணி நடிகையாக இருக்கும் போதே பிரபல தொழிலதிபர் டிம்மி நரன், என்பவரை திருமணம் செய்து கொண்டார் தற்போது 42 வயதாகும் இவருக்கு 4 வயதில் ஒரு மகன் உள்ளார்.

திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து திரைப்படங்கள் நடிப்பதில் ஆர்வம் காட்டி வரும் இஷா கோபிகர்,  தற்போது அரசியலிலும் குதித்துள்ளார்.

ஏற்கனவே சமீபகாலமாக இவர், அரசியலில் இணையப் போவதாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், இஷா நேற்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.  அவருக்கு பாஜகவில் பெண்கள் போக்குவரத்து பிரிவின் செயல் தலைவர் என்ற பதவி அளிக்கப்பட்டிருக்கிறது.

மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்றில் இஷா கோபிகர் பாஜகவில் இணைந்தார்.  இது குறித்து ட்விட்டரில் கூறியிருப்பதாவது எனக்கு அளிக்கப்பட்ட சிறப்பான வரவேற்புக்கு நன்றி என கூறியுள்ளார் மேலும் நாட்டு சேவைக்காக தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.