தளபதி விஜய் தற்போது மூன்றாவது முறையாக இயக்குனர் அட்லீ இயக்கத்தில் கைகோர்த்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் உள்ள எஸ்.ஆர்.எம். கல்லூரி வளாகத்தில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

விஜய், கால் பந்தாட்ட பயிற்சியாளராக நடிக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்கிறார். மேலும் யோகிபாபு, நடிகர் கதிர் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு, ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். மேலும் வரும் தீபாவளி அன்று இந்த படம் வெளியாக உள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இந்த படத்தை தொடர்ந்து தளபதி விஜய் அடுத்ததாக யார் இயக்கத்தில் நடிப்பார் என்பது ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய கேள்வியாக இருந்து வந்தது. மேலும் தொடர்ந்து அஜித் படங்களை மட்டுமே இயக்கி வந்த சிறுத்தை சிவா, முதல் முறையாக 'தளபதி 64 ' படத்தில் இணைய உள்ளதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில் இது குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது  'தளபதி64' படத்தை சிறுத்தை சிவா இயக்குவார் என்று கூறப்பட்ட நிலையில், கிட்ட தட்ட அந்த தகவல்உறுதியாகியுள்ளதாகவும், இந்த படத்தை சூப்பர்குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்க வாய்ப்பு உள்ளதாகவும்,  இந்த படத்தை  2020ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து இதுவரை எந்த ஒரு அதிகார பூர்வ தகவலும் வெளியாக வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.