நடிகர் விஜய் ஊர்... உலகிற்கு... தெரியாமல் தன்னுடைய ரசிகர்கள் மூலம், பல்வேறு நல்ல காரியங்களை செய்து வருகிறார். மேலும் ரசிகர்கள் மூலம் யாருக்கேனும் ஆபத்து என்கிற தகவல் வந்தால், உடனடியாக அந்த பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுக்கிறார் என்கிற தகவல் அடிக்கடி வெளியாகி வருகிறது.

அந்த வகையில், சென்னையில் இருந்து தூத்துக்குடி சென்ற, 11 பெண்கள் அங்கு ஊரடங்கின் காரணமாக மாட்டி கொண்டு தவித்த நிலையில், அவர்களை தங்களின் ரசிகர்கள் உதவியோடு, சென்னைக்கு வந்தடைய விஜய் உதவி செய்துள்ளதாக ஒரு தகவல் சமூக வலைத்தளத்தை வட்டமிட்டு வருகிறது. 

இது குறித்து வெளியாகியுள்ள தகவலில்... "சென்னையில் வசித்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பெண்கள் தூத்துக்குடியில் நடத்த விசேஷம் ஒன்றிற்கு கடந்த  40 நாட்களுக்கு முன் சென்றுள்ளனர். விசேஷம் முடிந்து ஊருக்கு செல்ல தயாரானபோது, அணைத்து போக்குவரத்து வசதியும் நிறுத்தப்பட்டது. 

கையில் இருந்த பணம் எல்லாம் செலவழிந்த பின்னர் சாப்பாட்டிற்கே திண்டாடும் நிலை ஏற்பட்டது. எதேர்ச்சியாக தூத்துக்குடியில் பல்வேறு உதவிகளை மக்களுக்கு செய்து வந்த, விஜய் ரசிகர்களை 11 பெண்களில் ஒருவரான தேவிகா சந்தித்து தங்களுடைய நிலை குறித்து எடுத்து கூறியுள்ளார்.

இதில் தேவிகா என்பவரை தவிர, மற்ற 10 பெண்களும் 20 வயதிற்கும் குறைவான பெண்கள் என கூறப்படுகிறது. எனவே அவர்களை ஒவ்வொரு நாளும் காப்பாற்றுவது பெரும் சவாலாக உள்ளது என தூத்துக்குடி விஜய் ரசிகர் நிர்வாகிகளிடம் அழுத படி கூறியுள்ளார். 

இந்த பெண்கள் பற்றிய தகவல்களை, உடனடியாக விஜய் ரசிகர்கள்  அகில இந்திய விஜய் ரசிகர் மன்ற தலைவருக்கு தெரிவித்துள்ளனர். அவர் விஜய்யின் கவனத்திற்கு இந்த தகவலை கொண்டு சென்றுள்ளார். பின் விஜய் தன்னுடைய ரசிகர்களுக்கு போன் செய்து, அந்த 11 பெண்களை மீட்பதற்கான நடவடிக்கைக்கு என்ன உதவி வேண்டுமோ அதனை செய்வதாக தெரிவித்துள்ளார்.

இதை தொடர்ந்து அந்த 11 பெண்களும் பத்திரமாக சென்னைக்கு கொண்டுவர ஏற்பாடு செய்யுமாறு கோரிக்கை விடுத்தார்.

இதனையடுத்து அந்த 11 பெண்கக்குளும் முறையாக அரசிடம் அனுமதி பெறப்பட்டு, சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர் என்கிற தகவல் தற்போது சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.