தனது திரையுலக வளர்ச்சிக்கு அவ்வப்போது இடையூறுகள் அளித்த வந்த அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணிக் கட்சிகள் தமிழக தேர்தலில் மண்ணைக் கவ்வியதைக் கொண்டாடும் வகையில் நூற்றுக்கணக்கான ஆட்டோ டிரைவர்களுக்கு பிரியாணி விருந்தளித்தும் பரிசுப் பொருட்கள் கொடுத்தும் மகிழ்ந்துள்ளார் நடிகர் விஜய்.

நடிகர் விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் இன்னும் பெயரிடப்படாத  படத்தில்  நடித்துவருகிறார்.அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி உருவாகும் இந்தப் படத்தில் நடிகர் விஜய் பயிற்சியாளராக நடிக்கிறார். தீபாவளிக்கு வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விஜய்யின் பிறந்தநாளன்று வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் திடீரென்று நேற்று விஜய் ரசிகர் மன்றத்தினரின் அவசர அழைப்பின்பேரில் நூற்றுக்கணக்கான ஆட்டோ டிரைவர்களுக்கு  பிரியாணி விருந்தும் பரிசுப்பொருட்களும் பரிமாறப்பட்டன. மே தினத்தை முன்னிட்டு முன்பே இந்த விருந்தை விஜய் அளிக்க விரும்பியதாகவும் அப்போது படப்பிடிப்பில் அவர் பிசியாக இருந்ததால் அது தள்ளிப்போனது என்றும் சால்ஜாப்பு சொல்லப்பட்டாலும் இந்த தடபுடல் விருந்தானது தமிழக இடைத்தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி மண்ணைக் கவ்வியதற்காக தரப்பட்ட அரசியல் விருந்து என்றே கிசுகிசுக்கப்படுகிறது.விஜய் படப்பிடிப்பில் இருந்த காரணத்தால், அவரது உத்தரவின் பேரில் விஜய் மக்கள் இயக்கத்தின் மாநில நிர்வாகி புஸ்ஸி ஆனந்த் இந்நிகழ்வை நடத்தினார்.