இன்று காலை முதல் தளபதி விஜயின் வீட்டில் வருமானவரி துறை அதிகாரிகள், அதிரடி ரெய்டு நடத்தி வந்த நிலையில், விஜய் தான் வாங்கும் சம்பளத்திற்கு முறையாக வரி கட்டியுள்ளதாக ஐடி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் தற்போது நடித்துள்ள 'மாஸ்டர்' திரைப்படம், அடுத்த மாதம் ரிலீஸ் ஆக உள்ள நிலையில், இந்த படத்தின் போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் படு வேகமாக நடந்து வருகிறது.

மேலும் மார்ச் 15 ஆம் தேதி, 'மாஸ்டர்' படத்தின் இசையை பிரமாண்டமாக வெளியிட தயாராகிவிட்டனர் படக்குழுவினர். 
எப்போதும் படத்தின் ரிலீஸ் சமயத்தில் தான், தளபதிக்கு பிரச்சனை மேல் பிரச்சனைகள் வருவது வழக்கம். ஆனால் இந்த முறை, ஆடியோ லஞ்ச் சமயத்திலேயே பல பிரச்சனைகள் வந்துவிட்டது.

ஏற்கனவே, 'பிகில்' பட சம்பளம் தொடர்பாக கடந்த ஓரிரு மதத்திற்கு முன், ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 20 இடங்களில் அதிரடி ரெய்டு நடத்தப்பட்டது. இதில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்ற பட்டதாக கூறப்பட்டது. நெய்வேலியில் 'மாஸ்டர்' படப்பிடிப்பில் இருந்த விஜய்யை நேரில் சந்தித்து ஐ.டி. அதிகாரிகள் சம்மன் வழங்கினார்.

படப்பிடிப்பில் நடத்திய விசாரணைக்கு பின், அவருடைய காரிலேயே வைத்து விஜய்யை சென்னைக்கு அழைத்து வந்தனர். இதுகுறித்து சமீபத்தில் நடத்தப்பட்ட விசாரணைக்கு விஜய்யின் சார்பாக அவருடைய ஆடிட்டர் நேரில் ஆஜராகி விளக்கம் கொடுத்தார்.

இந்நிலையில் இன்று மீண்டும் பனையூரில் உள்ள விஜய் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.  இந்த சோதனை மாலை 5 மணிவரை நீடிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஏற்கனவே நடைபெற்ற சோதனையின் போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களை கொண்டு இந்த விசாரணை நடைபெறுவதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள வருமான வரி துறை அதிகாரிகள், நடிகர் விஜய் பிகில் படத்திற்கு அவர் பெற்ற 50 கோடி சம்பளத்திற்கு, மாஸ்டர் படத்திற்கு அவர் சம்பளமாக பெற்ற 80 கோடி சம்பளத்திற்கும் முறையாக வரி கட்டியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.