கடந்த சில வருடங்களாகவே, விஜய் அரசியல் பற்றி வாய் திறக்கவில்லை என்றாலும், அவருடைய தந்தை எஸ்.ஏ.சி... விஜய்யின் அரசியல் வருகை குறித்து அவ்வப்போது வெளிப்படுத்தி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் கூட விஜய்யின் மக்கள் இயக்கம் சரியான நேரத்தில், அரசியல் கட்சியாக மாறும் என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் நேற்று, தளபதி விஜய் சென்னை பனையூரில் உள்ள தன்னுடைய இல்லத்தில், விஜய் மக்கள் மன்றத்தை சேர்ந்தவர்களுடன் ரகசிய ஆலோசனை நடத்தியுள்ள சம்பவம் விஜய் அரசியலில் நுழைய ஆயத்தம் ஆகிவிட்டாரா? என்கிற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத சட்ட மன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திடீர் என விஜய், திருச்சி தெற்கு, திருச்சி மேற்கு, மதுரை வடக்கு, மதுரை மேற்கு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியிருக்கிறார். இந்த சந்திப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் சிறு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கூட்டத்தில் மாவட்ட நற்பணி மன்றங்கள் தன்னை அரசியலில் தொடர்புப்படுத்தி போஸ்டர்கள் ஒட்டுவதை தவிர்க்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய அரசியல் வருகை குறித்து அறிவித்த போதிலும், ரஜினி மக்கள் மன்றத்தின் உரிய அனுமதி இல்லாமல் எவ்வித போஸ்டர்களை நிர்வாகிகள் ஒட்ட கூடாது என தெரிவித்திருந்தார்.

தலைவரையே நூல் பிடித்து பின்பற்றும் விதத்தில், தளபதியும் தற்போது தன்னை அரசியலில் சம்மந்தப்படுத்தி போஸ்டர் ஓட்டுவதை நிறுத்த வேண்டும் என தன்னுடைய முதல் நிபந்தனையை போட்டுள்ளார். இதை தவிர மாவட்ட வாரியாக இன்னும் சில நிர்வாகிகளை விஜய் சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. விஜய்யின் அரசியல் பிரவேசம் எப்போது ஆரம்பமாகும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.