நடிகர் விஜய்யின் தந்தை, கிறிஸ்துவ மதத்தில் பிறந்திருந்தாலும், இந்து மதத்தை தான், பின்பற்றி வருவதாக கூறியுள்ளார்.

நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் உள்ள தாமிரபரணி புஷ்கரனி விழாவில் கலந்து கொண்டு, நடிகர் விஜயின் தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் புனித நீராடினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்களிடம் நற்பெயரை பெற்ற,  விஜய் அரசியலுக்கு வந்தால் என்ன தவறு? மக்களால் உயர்த்தி விடப்பட்டவர் மக்களுக்காக பணியாற்ற வருகிறார். என்னை ஆன்மீகத்தில் ஈடுபட வைத்தவர் சத்குரு ஜக்கி வாசுதேவ் தான். பிறப்பால் கிறிஸ்துவனாக இருந்தாலும் இந்தியாவில் பிறந்ததால் இந்து மதத்தை பின்பற்றுகிறேன் என்று கூறினார்.

தற்போது இவர் இப்படி கூறி இருந்தாலும், கடந்தாண்டு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசுகையில்,  திருப்பதி கோவிலில் காணிக்கை செலுத்துவது கடவுளுக்கு கொடுக்கும் லஞ்சம் என கூறி சர்ச்சையில் சிக்கினார். 

இது இந்துக்களின் மத உணர்வை புண்படுத்துவதாக கூறி அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் சில தினங்களுக்கு முன்னர் எஸ்.ஏ.சந்திரசேகர், முன்ஜாமின் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே, நடிகர் விஜய் எப்போது அரசியலில் இறங்குவார் என சந்தேகத்தை ஏற்படுத்தியது, சர்க்கார் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜயின் பேச்சு. இந்நிலையில் அதனை உண்மையாகும் வகையில், அவருடைய தந்தையின் பேச்சு உள்ளதாக பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.