நடிகர் ரஜினி சொன்ன அதிசயம், அற்புதம்  இளைய தளபதி விஜய்யைத்தான் என மதுரையில் ஆங்காங்கே சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.  தமிழகத்தில் வெற்றிடம் உள்ளது என தொடர்ந்து கூறிவரும் ரஜினிகாந்த், சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது,  2021 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் தமிழக அரசியலில் அதிசயம், அற்புதம்,  நிகழும்  என கூறியிருந்தார். 

இந்நிலையில் அவரது கருத்துக்கு தமிழக அரசியல் தளத்தில் ஆதரவும் ,  எதிர்ப்பும் இருந்து வருகிறது.  இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி  அவர்கள்.  ரஜினி சொன்னது போல அதிசயம் நடக்கும்,  அதாவது அதிமுகவை சேர்ந்த ஒருவர் தமிழகத்தின் முதலமைச்சர் ஆவார் என ரஜினிக்கு சூசகமாக எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.  அதே நேரத்தில் அதிமுக அமைச்சர்கள் ரஜினியின் கனவு பலிக்காது என பதில் கொடுத்துவருகின்றனர்.  இதேபோல ஒவ்வொரு அமைச்சரும் ரஜினிக்கு எதிராக ஒரு வெவ்வேறு வகையில் எதிர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.  இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் ,  ரஜினியின் அதிசயம் அற்புதம் கருத்தில் தனக்கு  உடன்பாடு இல்லை என்றார். 

தேர்தலைப் பொறுத்தவரையில் மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு ,  எனவே நல்லவர்கள் யாரோ அவர்களுக்கே மக்கள் வாக்களிப்பார்கள் என  தெரிவித்துள்ளார்.  இந்நிலையில் ரஜினி-கமல் வரிசையில் அரசியலுக்கு வரப்போகிறேன் என கூறி வரும் நடிகர் விஜய் ,  அரசியலில் குதிப்பதற்கு ஆயத்தமாகி வருகிறார் .  இந்நிலையில் அவரது ரசிகர்கள் ரஜினியின் கருத்துக்கு பதிலளிக்கும் விதமாக,  ஒரு படி மேலேபோய் ரஜினிகாந்த் சொல்லுகிற அதிசயம் அற்புதம் வேறு யாருமில்லை, எதிர்வரும்  2021ல் மக்களுக்காக நிகழப்போகும் அதிசயம்  நடிகர் விஜய் தான், அவர்தான் அதிசயம், அற்புதம் என மதுரை மாநகர் முழுவதும் சுவரொட்டிகளை ஒட்டி அதிரடி காட்டியுள்ளனர்.  அந்த போஸ்டரில் ரஜினி,  கமலுக்கு நடுவில் விஜய்யின் புகைப்படம் மக்களைப் பார்த்து கையசைப்பதுபோலா இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.