நமது எதிரி எப்போதுமே அஜீத் தானே ஒழிய ரஜினி அல்ல என்று பொருள்படும்படி விஜய் ரசிகர் மன்றத்திலிருந்து ஒரு அதிர்ச்சிக் கடிதம் வெளியாகியிருக்கிறது. இதனால் மீண்டும் அஜீத்,விஜய் ரசிகர்கள் மத்தியில் கமெண்ட் யுத்தங்கள் தொடங்க ஆரம்பித்திருக்கின்றன.

தளபதி விஜய்யின் முன்னாள் மக்கள் தொடர்பாளரும், பினாமியுமான பி.டி.செல்வக்குமார் சமீபத்தில் தனியார் தொலைக்காட்சியில் நடந்த விவாதம் ஒன்றில் கலந்துகொண்டு ரஜினிக்கு எதிரான கருத்துக்களைக் கூறினார். ‘சர்கார்’ படத்துக்குப்பின்னர் விஜய் ரஜினியை விட பெரிய நடிகர் என்பதை அந்த விவாதத்தில் தொடர்ந்து வலியுறுத்திக்கொண்டே இருந்தார்.

அதைப் பார்த்த நடிகர் விஜய்க்குப் பேரதிர்ச்சி. ‘விஸ்வாசமும், ‘பேட்ட’யும் ரிலீஸாகும் சமயத்தில் தனது ரசிகர்கள் யாரை ஆதரிப்பது என்ற குழப்பத்தில் இருக்கும் நிலையில் செல்வக்குமாரின் கருத்து தன்னுடைய கருத்தாக மாறி ரசிகர்கள் ரஜினிக்கு எதிரான மனநிலைக்கு வந்துவிடக்கூடாதே என்று பயந்து தனது ரசிகர் மன்றப் பொறுப்பாளர் மூலம் அவசர அவசரமாக ஒரு கடிதம் வெளியிட்டிருக்கிறார். 

அதில்...நமது தளபதி விஜய் அவர்களின் முன்னாள் மக்கள் தொடர்பாளராக நீண்டகாலம் நல்ல விதமாக பணிபுரிந்தவர் தற்போது வேறு சில காரணங்களால் அப்பணியில், நமது தளபதி விஜய் அவர்களுடன் இல்லை என்பதை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வர கடமைப்பட்டுள்ளேன்.

மேலும், அவர், நமது மக்கள் இயக்கத்தில் யாதொரு பொறுப்பையும் இதுநாள் வரை வகிக்கவில்லை !

இருப்பினும், தளபதி விஜய் அவர்கள் பெயரை பயன்படுத்தி ஒரு சிலர், அவர்களது சொந்த கருத்தை, தளபதி விஜய் அவர்களின் கருத்தை போல் ஊடகங்களில் வெளியிடுவதை நமது மதிப்புமிகு தளபதி விஜய் அவர்கள் ஏற்க்கவில்லை என்பதை இதன் மூலம் உறுதிப்படுத்த விரும்புகிறேன்.

அதோடு, நமது தளபதி விஜய் அவர்கள் எந்த காலக்கட்டத்திலும், எச்சூழலிலும், சக நடிகர்களையோ, பொது மனிதர்களையோ, இழிவாக, தரம் தாழ்ந்தோ, ஒப்பிட்டு பேசியதில்லை ! அப்படி யாரையும் பேச சொல்லி யாருக்கும் நமது தளபதி விஜய் அவர்கள் அதிகாரம் அளிக்கவில்லை என்பதை இந்நேரத்தில் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

ஆகவே, தளபதி விஜய் குறித்த தகவல்களை, ஊடகங்களில் பேசுவது, விவாதிப்பது, பங்கேற்று கருத்து கூறுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவோரின் கருத்துக்களை யாரும் நம்பவேண்டாம் என இதன் மூலம் கேட்டுக்கொள்கிறேன்.

இவன் 
Bussy N Anand 
(பொறுப்பாளர்)

என்று அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் எப்பவும் நம் எதிரி அஜீத் தான். ரஜினியை அப்புறமா பாத்துக்கலாம் என்று விஜய் சொல்லாமல் சொல்வதுபோல் இருக்கிறது.