விஜய்க்கு மாபெரும் மாஸ் ஆக்‌ஷன் படமாக அமைந்தது "வேட்டைக்காரன்". 2009ம் ஆண்டு பாபுசிவன் இயக்கத்தில் "வேட்டைக்காரன்" திரைப்படம் வெளியானது. சன் பிக்சர்ஸ் தயாரித்த அந்த படத்தில், அனுஷ்கா, ஸ்ரீரவி, சலீம் கோஸ், சாயாஜி ஷிண்டே உள்ளிட்டோர் நடித்திருந்தனர். வில்லனை எதிர்க்கும் ஹீரோவின் சாதாரண கதை தான் என்றாலும், அதனை படமாக்கிய விதம், விஜய் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. மேலும் இந்த படம் 2007ம் ஆண்டு வெளி வந்த விஜய்யின் சூப்பர் ஹிட் படமான போக்கிரி படத்தின் வசூலை முறியடித்தது. 

"வேட்டைக்காரன்" படத்தில் இடம் பெற்ற புலி உறுமுது, நான் அடிச்சா தாங்கமாட்ட, கரிகாலன் கால போல, ஒரு சின்னத்தாமரை, என் உச்சி மண்டைல என அனைத்து பாடல்களும் பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமானது. விஜய் ஆண்டனி இசையமைத்திருந்த இந்த படம் பின்னணி இசையிலும் மாஸ் காட்டியிருந்தது.

பஞ்ச் டைலாக், ஆக்‌ஷன், காமெடி, டான்ஸ், சாங் என அனைத்திலும் விஜய் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் மாஸ் கமர்சியல் படமாக திரைக்கு வந்தது வேட்டைக்காரன். அப்படம் ரிலீஸ் செய்யப்பட்டு இன்றுடன் 10 ஆண்டுகள் ஆவதை விஜய் ரசிகர்கள் சோசியல் மீடியாவில் கொண்டாடி வருகின்றனர். 

"வேட்டைக்காரன்" படத்தில் தங்களது பிடித்த காட்சி, பாடல், வசனம் என அனைத்தையும் #10YearsOfVettaikaran என்ற ஹேஷ்டேக்குடன் சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகின்றனர். இந்திய அளவில் ட்ரெண்டாகியுள்ள இந்த ஹேஷ்டேக்கை, உலக அளவில் ட்ரெண்டாக்காமல் விஜய் ரசிகர்கள் விடமாட்டார்கள் போல தெரிகிறது.