தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா படப்பிடிப்பில் ரயிலை பிடிக்க ஓடும் காட்சி எடுக்கப்பட்ட போது கீழே விழுந்து நூல் இழையில் உயிர் தப்பிய சம்பவம் படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

தெலுங்கு திரையுலகில் மட்டும் இன்றி, தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் 'நோட்டா' படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் விஜய் தேவாரகொண்டா. இவர் தெலுங்கில் நடித்து மிகப்பெரிய ஹிட் ஆன அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக்கில் தான் தற்போது, பிரபல நடிகர் விக்ரமின் மகன் துருவ் கதாநாயகனாக அறிமுகமாக உள்ளார். இந்த படத்தை தேசிய விருது இயக்குனர் பாலா இயக்குகிறார். 

குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சி அடைந்த நடிகர்களில் ஒருவரான விஜய் தேவரகொண்டா, தற்போது  'டியர் காம்ரேட்' என்ற படத்தில் நடித்து வருகிறார். 

இந்த படத்தின் படப்பிடிப்பு காக்கிநாடாவில் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பின்போது, ரயிலை பின்தொடர்ந்து பிடிக்க ஓடுவது போல காட்சி எடுக்கப்பட்டுள்ளது. 

அப்போது ரயிலின் அருகே சென்ற விஜய் தேவரகொண்டா தடுமாறி விழுந்துள்ளார். உடனே அருகில் இருந்தவர் அவரை ரயிலில் சிக்காதவாறு  இழுத்தபோது, நூல் இழையில் உயிர் தப்பினார். இதனால் அவருக்கு கையில் பலமாக அடிப்பட்டது .

இதுகுறித்த புகைப்படத்தை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஜய் தேவரகொண்டா பதிவிட்டுள்ளார்.