‘தளபதி 64’ படத்தை இன்னார்தான் இயக்கப்போகிறார் என்று பல முன்னணி இயக்குநர்கள் பெயர் அடிபட்டிக்கொண்டிருக்கும் நிலையில் அவ்வளவாக பிரபலமாக இளைய தலைமுறை இயக்குநரைத் தேர்வு செய்திருக்கிறார் நடிகர் விஜய்.

தீபாவளி ரிலீஸைக் குறிவைத்து படப்பிடிப்பு நடந்துவரும் ‘தளபதி 63’ படத்தின் மூன்றாவது கட்டப்படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில் விஜயின் அடுத்த பட இயக்குநர் குறித்த செய்தி வெளியாகியிருக்கிறது.ஸ்ரீ, சுதீப் கிஷன், ரெஜினா உட்பட பலர் நடிப்பில் வெளியான ’மாநகரம்’ படத்தை இயக்கியவர் புதுமுகம் லோகேஷ் கனகராஜ். 2017 இல் வெளியான அந்தப்படம் பிரமாதமான வரவேற்புப் பெற்றதோடு நல்ல வசூலையும் குவித்தது.

அந்த வெற்றிக்குப் பரிசாக  இயக்குநர் லோகேஷ்கனகராஜை அழைத்து அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பைக் கொடுத்தார் நடிகர் கார்த்தி. கார்த்தி நடிப்பில் கதாநாயகியே இல்லாமல் உருவாகும் அந்தப்படத்தின் பெயர் கைதி. படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாகச் சொல்லப்படுகிறது.

இந்நிலையில்தான்  லோகேஷ் கனகராஜுக்கு நடிகர் விஜய்யிடமிருந்து அழைப்பு வந்திருக்கிறது.  சற்றும் எதிர்பாராத அழைப்பால் விஜய்யைச் சந்தித்த லோகேஷ் கனகராஜ், தன்னிடம் இப்போதைக்கு முழுநீள ஸ்கிரிப்ட் இல்லையென்று கூறி 5 நிமிடங்கள் மட்டும் ஒரு கதைக்கருவைச் சொன்னாராம். அதுவே விஜய்க்குப் பிடித்துவிட, ‘முழுக்கதையையும் ரெடி பண்ணுங்ணா நீங்கதான் என்னோட அடுத்த பட டைரக்டர்’ என்று அதிர்ச்சி அளித்திருக்கிறாராம்.