விஜயின் பிகில் திரைப்படத்தால் கார்த்தியின் கைதி திரைப்படமும் தீபாவளியின் போது சிக்கலை எதிர்கொண்டுள்ளது.

இந்த ஆண்டு தீபாவளிக்கு விஜயின் பிகில் – கார்த்தியின் கைதி ஆகிய படங்கள் வெளியாக உள்ளன. வரும் 25ந் தேதி இந்த இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியாக ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. கார்த்தியின் கைதி படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். மிகுந்த பொருட் செலவில் இந்த படம் தயாராகியுள்ளது.

பிகில் படத்திற்கு இணையான வெளியீட்டிற்கு தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு ஏற்பாடு செய்துள்ளார். திரையரங்க உரிமையாளர்களும் பிகிலுக்கு இணையாக கைதி படத்தையும் வெளியிட ஆர்வம் காட்டி வருகின்றனர். அதற்கு காரணம் படம் செம சூப்பர் என்கிற விஷயம் தான். இந்த நிலையில் கைதி படத்தின் அதிகாலை சிறப்பு காட்சிக்கும் தற்போது வரை தமிழக அரசு அனுமதி கொடுக்கவில்லை.

விஜய் – அதிமுக மோதலால் அவரது பிகில் படத்திற்கு சிறப்பு காட்சி அனுமதிக்கப்படவில்லை. பிகிலுக்கு சிறப்புக் காட்சிக்கு அனுமதி கொடுக்காமல் கைதிக்கு மட்டும் கொடுத்தால் விமர்சனத்திற்கு ஆளாக நேரிடும் என்று தமிழக அரசு கருதுகிறது. எனவே கைதி படத்திற்கான அனுமதியையும் கொடுக்காமல் நிறுத்தி வைத்துள்ளதாக கூறுகிறார்கள்.

இதனால் ஏற்பட்ட குழப்பத்தால் படத்தை வெளியிடும் முடிவில் இருந்து ஒரு சில திரையரங்குகளும், விநியோகஸ்தர்களும் பின்வாங்குவதாக சொல்கிறார்கள். இதனால் டென்சன் ஆன எஸ்.ஆர் பிரபு நம் திரைப்படம் நிச்சயம் அதிகாலை வெளியாகும். அதற்கு பேசி வருகிறோம். அந்த படத்தால் நம்ம படத்திற்கு இப்படி ஒரு பிரச்சனை வரும் என்று எதிர்பார்க்கவில்லை என்று தலையில் அடிக்காத குறையாக பேசி வருகிறாராம்.