பெண்கள் கால்பந்து விளையாட்டு குறித்த கதையம்சம் கொண்ட இந்தப் படத்தில், விஜய் கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார். மேலும் அவர், தந்தை, மகன் என இரண்டு கதாபாத்திரங்களில் நடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகின.

இந்தப் படத்தின் பெயர் என்ன ? எப்போது வெளியாகும் ? போன்றவற்றை தெரிந்து கொள்ள விஜய் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். இந்நிலையில் , படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஜூன் 21-ம் தேதி மாலை 6 மணிக்கும், இரண்டாவது லுக் 22-ம் தேதி நள்ளிரவிலும் வெளியாகும் என்று படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி சமீபத்தில் ட்விட்டர் பதிவில் தெரிவித்திருந்தார்.

அதன்படி  ஃபர்ஸ்ட் லுக் நேற்று மாலை 6 மணிக்கு வெளியானது. தந்தை, மகன் என்று இரண்டு கேரக்டர்கள் படத்தில் இருப்பதை உறுதி செய்யும் விதமாக ஃபர்ஸ்ட் லுக் இருந்தது. படத்துக்கு ‘பிகில்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

இதையடுத்து பிகில் படத்தின் இரண்டாவது போஸ்டர் நள்ளிரவு 12 மணிக்கு வெளியானது. காவி வேட்டியுடன், கையில் ஆயுதமும் கழுத்தில் சிலுவையும் இருக்கும் வகையில் தந்தையின் கேரக்டர் இருக்க, பின்னணியில் மூன்று விஜய், வித்தியாசமான லுக்-களில் இருப்பது போன்ற போஸ்டர் வெளியிடப்பட்டது.

படத்தின் இரண்டு போஸ்டர்களுமே ரசிகர்களுக்கு விருந்து தரும் வகையில் அமைந்துள்ளது. மேலும், படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. ட்விட்டரிலும் #BIGIL என்ற ஹேஷ்டேக் நேற்று முதல் தற்போது வரை இந்திய அளவில் டிரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.