தமிழ் சினிமாவில் வித்தியாசமாக கதைக் களங்களை தேர்வு செய்து நடிப்பதில் அதிக கவனம் செலுத்தி வரும் நடிகர்கள் யார்? என்றால், அருண்விஜய் மற்றும் விஜய் ஆண்டனி என சட்டென சொல்லிவிடலாம். இதேபோல், வித்தியாசமான கதைகளை உருவாக்கும் இயக்குநர்கள் யார்? என்றால் மூடர் கூடம் நவீன் நினைவுக்கு வருவார். 

தற்போது, இந்த மூவரும் கூட்டணி சேர்ந்திருக்கும் படம்தான் 'அக்னிச் சிறகுகள்'. 'மூடர் கூடம்' படத்தின் ஹிட்டுக்குப்பிறகு நவீனின் அடுத்த படைப்பாக உருவாகும் இந்தப் படத்தில், முதல்முறையாக அருண் விஜய் - விஜய் ஆண்டனி இணைந்து நடிக்கின்றனர். 

ஹீரோயினாக அக்ஷரா ஹாசன் நடிக்க, முக்கிய கேரக்டர்களில் பிரகாஷ்ராஜ், செண்ட்ராயன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். நடராஜன் சங்கரன் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு, பாட்சா ஒளிப்பதிவு செய்கிறார். அம்மா கிரியேஷன் சார்பில் டி.சிவா தயாரிக்கும் 'அக்னிச் சிறகுகள்' படத்தின் ஷுட்டிங், ஐரோப்பிய நாடுகளில் நடைபெற்று வருகிறது.


இந்நிலையில், படத்தில் அருண்விஜய், அக்ஷரா ஹாசன் என பல கேரக்டர்கள் நடித்தாலும், முதலில் விஜய் ஆண்டனியின் கேரக்டர் லுக் இன்று (நவ.20) மாலை 5.00 மணிக்கு வெளியிடப்படும் என படக்குழு அறிவித்திருந்தது. அத்துடன், முற்றிலும் மாறுப்பட்ட ஒரு விஜய் ஆண்டனியை காண்பீர்கள் என்று கூறி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. 


அதுபடியே, 'அக்னிச் சிறகுகள்' படத்தில் விஜய் ஆண்டனியின் கேரக்டர் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டு ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது. இந்தப் படத்தில் சீனு என்ற கேரக்டரில், மிகவும் வித்தியாசமான லுக்கில் விஜய் ஆண்டனி தோன்றுகிறார். 

அவரது இந்த லுக்தான், தற்போது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி வருவதுடன், சோசியல் மீடியாவிலும் வைரலாகி வருகிறது.
இதனைத் தொடர்ந்து, 'அக்னிச் சிறகுகள்' படத்தில் நடிக்கும் மற்ற கேரக்டர்களின் லுக்குகளை வரிசையாக வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இதனால், வரும் நாட்களில் 'அக்னிச் சிறகுகள்' படக்குழுவிடமிருந்து பல சர்ப்ரைஸ்களை உறுதியாக எதிர்பார்க்கலாம்.