சொந்தப்படம் தயாரிப்பதை நிறுத்திக்கொண்டதோடு, ஹீரோவாக நடிக்க வரிசையாக அரைடஜன் படங்களுக்கு அட்வான்ஸ் வாங்கிப்போட்ட விஜய் ஆண்டனி பதினந்து கோடி மதிப்புள்ள பங்களா ஒன்றை விலைக்கு வாங்கியுள்ளதாக நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துள்ள கொலைகாரன் படம் இப்போது வெளியீட்டுக்குத் தயாராகியுள்ளது.இந்தப்படத்தை பிரதீப் என்பவர் தயாரித்திருக்கிறார். ஆனால் இதற்கு முன் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்து வெளியான ’அண்ணாதுரை’, ’காளி’, ’திமிருபுடிச்சவன்’ ஆகிய மூன்று படங்களையும் விஜய் ஆண்டனியே தயாரித்திருந்தார்.அம்மூன்று படங்களுமே சரியாகப் போகாததால் நட்டம் ஏற்பட்டு அதனால் அவருக்குக் கடன் தொல்லையும் ஏற்பட்டதாகக் கூறப்பட்டது.

அதனால் இனிமேல் சொந்தமாகப் படம் தயாரிப்பதில்லை என்று முடிவெடுத்து பிற தயாரிப்பு நிறுவனங்களின் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். தற்போது ரிலீஸுக்குத் தயாராகவுள்ள கொலைகாரனை அடுத்து ‘அக்னி சிறகுகள்’,’காக்கி’,’தமிழரசன்’ ஆகிய மூன்று படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். இவை போக அறிவிக்கப்படாத இன்னும் ஒன்றிரண்டு படங்களுக்கும் அவர் அட்வான்ஸ் வாங்கியிருப்பதாகத் தெரிகிறது.

சொந்தப்படங்களின் தொடர்தோல்வியால் அவர் கடனில் சிக்கிக் கொண்டார் அதனால் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார் என்று உலகம் நினைத்துக் கொண்டிருக்கிறது.ஆனால் அவரோ சென்னையின் மையப்பகுதியில் ஒரு புதுவீடு வாங்கிக் குடியேறியிருக்கிறாராம். அந்த வீட்டின் விலை சுமார் பதினைந்து கோடி என்கிறார்கள். இனி டைரக்‌ஷன், தயாரிப்பு என்று ரிஸ்க் எடுக்காமல் வெறும் நடிகராக மட்டும் விஜய் ஆண்டனி பயணப்படக்கூடும்.

பின்குறிப்பு...படங்களில் ரம்யா நம்பீசனும் விஜய் ஆண்டனியும் ரொமான்ஸ் பண்ணிக்கொண்டிருப்பது அந்த புது பங்களாவில்... இது ‘தமிழரன்’ படத்துக்காக...