அட்லீ - விஜய் கூட்டணியில் திரைக்கு வந்த "பிகில்" திரைப்படம் அடுத்தடுத்து சாதனைகளை படைத்து வருகிறது. தற்போது "கைதி" பட புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வருகிறார். அந்தப் படத்திற்கு தற்காலிகமாக "தளபதி 64" எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனும், வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதியும் நடிக்கின்றனர். இந்தப் படத்திற்கு ராக் ஸ்டார் அனிரூத் இசையமைக்கிறார். 

சென்னையில் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், டெல்லியில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலேஜ் புரொபசராக விஜய் நடித்து வருவதாக கூறப்படுகிறது. இதனிடையே டெல்லியில் உள்ள பிரபல கல்லூரிகளில் படப்பிடிப்பு நடைபெற்று வரும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் லீக் ஆகி வைரலாகின.  இதுவரை ஷூட்டிங்கில் பங்கேற்காத மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, டிசம்பர் மாதம் முதல் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதையடுத்து கர்நாடகாவில் ஷீட்டிங் நடக்க உள்ளதாகவும், அதற்காக காவல்துறையிடம் படக்குழு அனுமதி வாங்கியுள்ளதாக கடிதம் ஒன்றும் சோசியல் மீடியாவில் கடந்த சில நாட்களாக வைரலாகி வருகிறது. அங்கு விஜய், விஜய் சேதுபதி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது டெல்லியில் விஜய், மாளவிகா மோகன் மற்றும் பிறரது காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்ட நிலையில், விஜய் சேதுபதி சம்பந்தப்பட்ட காட்சிகள் மட்டும் பெங்களூருவில் படமாக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக பெங்களூருவில் பிரம்மாண்ட செட் போடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.