சினிமாவுல இதெல்லாம் சகஜமப்பா என்று நினைத்தாரோ என்னவோ தனது இந்நாள் காதலி நயன்தாராவின் முன்னாள் காதலர் சிம்புவுக்கு தனது மனம் திறந்த வாழ்த்துகளை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் இயக்குநர் விக்னேஷ் சிவன்.

நடிகர் சிம்பு சினிமாவுக்குள் நுழைந்து 35 ஆண்டுகள் ஆனதை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தற்போது 36 வது அகவையில் இருக்கும் 1984ம் ஆண்டு பிறந்த சிம்பு  1985ம் ஆண்டே, அதாவது ஒரு வயது ஆகும்போதே தனது தந்தை டி.ஆர் இயக்கித் தயாரித்த ‘உறவைக் காத்த கிளி’படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனது வலது காலை எடுத்து வைத்தார். அடுத்து ‘மைதிலி என்னைக் காதலி’,’எங்க வீட்டு வேலன்’ போன்ற ஏகப்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாகவே அட்ராசிட்டி புரிந்த அவர் 2002ல் ‘காதல் அழிவதில்லை’படத்தின் மூலம் வயதுக்கு வந்தார்.

அடுத்து இந்த 17 ஆண்டுகளில் சுமார் 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் சிம்பு அடிக்கடி நடிககளுடன் கிசுகிசுக்களில் அடிபடுவது, ஷூட்டிங் ஸ்பாட்டுகளுக்கு சொன்ன நேரத்துக்கு வராமல் சொதப்புவது, அல்லது மொத்தமாகவே டிமிக்கி கொடுப்பது போன்ற காரணங்களால் சொல்லிக்கொள்ளும்படி ஹிட்டுகள் கொடுக்கமுடியாமல் தவித்துவருகிறார். தற்போது தனது முன்னாள் காதலி ஹன்ஷிகா மோத்வானிக்காக ‘மஹா’படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்துவரும் அவர் கைவசம் ஒரு கன்னட ரிமேக்கும்,  இருக்கா இல்லையா என்று தெரியாத வெங்கட் பிரபுவின் ‘மாநாடு’படங்களும் உள்ளன.

இந்நிலையில் அவரது 35 வது ஆண்டுவிழா கொண்டாட்டம் தொடர்பாக புதிய ஹேஷ்டேக் ஒன்றை அவரது ரசிகர்கள் நேற்று துவக்கி வைக்க, அந்த வாழ்த்தாளர்கள் பட்டியலில் விக்னேஷ் சிவனும் இணைந்துள்ளார். அவரது வாழ்த்தில்,...தான் செய்கிற அத்தனை காரியங்களுக்கும் சிறப்பு சேர்க்கும் சிம்பு சாருக்கு எனது வாழ்த்துகள்...உலகம் முழுக்க இருக்கும் உங்கள் ரசிகர்கள்தான் உங்களுக்கு பெரும் பலம் சார்...என்று வாழ்த்தியிருக்கிறார்.

அவரது பதிவுக்குக் கீழே ‘சகளை வெர்சஸ் ரகளை’...நீ படிக்குற பள்ளிக்கூடத்துல எங்க சிம்பு ஹெட்மாஸ்டர் பாஸ்’ என்று பல அதகளமான கமெண்டுகள் குவிகின்றன.