'தல' அஜித் நடிப்பில் பொங்கல் தினத்தை முன்னிட்டு, உலகம் முழுவதும் வெளியான 'விஸ்வாசம்' திரைப்படம், அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் தொடர்ந்து நல்ல விமர்சனங்களையும், பாராட்டுகளையும் பெற்று வருகிறது.

குறிப்பாக குடும்ப படம் என அனைவரும் புகழ்ந்து வருகின்றனர்.  படத்திற்கு இளம் பெண்கள் மத்தியிலும்,  குடும்பத்தலைவிகள் மத்தியிலும் அதிகபடியான வரவேற்பு கிடைத்து வருவதாக திரையரங்க உரிமையாளர்கள் கூறியுள்ளனர்.

மேலும் கிளைமேக்ஸ் சீனில்,  அஜித் நடிப்பு அனைவரையும் அழ வைத்து விட்டது என கூறி அது குறித்த சில புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களும் வெளியாகி இந்த தகவலை உறுதி செய்தது.

இந்நிலையில் இந்த படத்தை நயன்தாராவுடன் அமெரிக்காவில் பார்த்த இயக்குனரும், நயன்தாராவின் காதலருமான விக்னேஷ் சிவன் விஸ்வாசம், படக்குழுவினரையும் அஜித் மற்றும் நயன்தாராவையும் பாராட்டி, ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில், அஜித் இந்த படத்தில் இறங்கி அடித்துள்ளார் என்றும், இந்த படத்தால் நமக்கு மிகப்பெரிய அனுபவம் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து, இயக்குநர் சிவாவின் எமோஷ்னல், கதை மற்றும் காட்சிகள் மிக அருமையாக வந்திருப்பதாகவும் அவருக்கு உறுதுணையாக இருந்த இசையமைப்பாளர் டி இமான் மற்றும்  வெற்றிக்கு பாடுபட்ட பட குழுவினருக்கு தனது பாராட்டுக்கள் என தெரிவித்துள்ளார்.  கடைசியாக நயன்தாராவும் தரமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் என்று தன்னுடைய காதலியை கடைசியில் வாழ்த்தியுள்ளார் விக்னேஷ் சிவன்.