கேன்ஸ் படவிழாவில் பல முக்கிய படங்களைப் பார்த்ததன் மூலம் என் சினிமா அறிவு இன்னும் விசாலமடைந்துள்ளது. அந்த எக்ஸ்ட்ரா அறிவை சிவகார்த்திகேயன் படத்தில் பயன்படுத்தப்போகிறேன்’என்று ரிஸ்கான ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் நயனின் சிவன் விக்னேஷ்.

சிவகார்த்திகேயனின் 17-வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளார். பிரபல தயாரிப்பு நிறுவனமான லைகா இப்படத்தைத் தயாரிக்கிறது. இசை - அனிருத்.இப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாதம் முதல் ஆரம்பமாகவுள்ளது. அடுத்த வருடம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சமீபத்தில் நடந்துமுடிந்த கேன்ஸ் பட விழாவில் கலந்துகொண்ட இயக்குநர் விக்னேஷ் சிவன் தன்னுடைய அனுபவங்களை ’ஃபிலிம் காம்பானியன்’ இணைய இதழில் எழுதியுள்ளார்.

அதில், ‘ஒரு படம் குறித்து விவாதிக்க ராஜீவ் மேனன் சாரை சந்தித்தபோது, கேன்ஸ் பட விழாவை நான் காண வேண்டும் என்று அவர் பரிந்துரை செய்தார். ஒரு நிமிடம் கூட நான் யோசிக்கவில்லை, அங்குச் செல்லவேண்டும் என்று முடிவெடுத்துவிட்டேன்.

மிகச்சிறந்த படங்களையும் சிறந்த மனிதர்கள் சிலரையும் அங்குக் கண்டேன். கேன்ஸ் அனுபவம் மகத்தானது. நான் எந்தவொரு கலைப்படத்தையும் எடுக்கப்போவதில்லை. ஆனால் தரமான பட உருவாக்கம் குறித்துக் கொஞ்சம் கற்றுக்கொண்டேன். அடிப்படையாக அதன் தரம் மற்றும் வலுவான திரை மொழி குறித்து. அங்குக் கற்றுக்கொண்டதை சிவகார்த்திகேயனுடனான அடுத்தப் படத்தில் கட்டாயம் செயல்படுத்தவேண்டும்.

கேன்ஸ் பட விழாவுக்கு அடுத்தமுறை ஒரு படத்துடன் வருவேன் அல்லது இதே அனுபவத்துக்காக இன்னும் சில திரையுலக நண்பர்களுடன் வருவேன்’ என்று கூறியுள்ளார்.ஏற்கனவே’மிஸ்டர் லோக்கல்’படத்தின் மூலம் பெரும் சரிவை சந்தித்துள்ள சிவகார்த்திகேயன் இந்த கேன்ஸ் ரிஸ்கைத் தாங்குவாரா?