‘அசுரன்’படம் டோலிவுட் முதல் பாலிவுட் வரை பல அதிர்வலைகளைக் கிளப்பியுள்ள நிலையில் அதன் இயக்குநர் வெற்றிமாறனை மும்பைக்கு வரவழைத்து நடிகர் ஷாருக் கான் சந்தித்துள்ளது கோடம்பாக்க வட்டாரத்தை பரபரப்பாக்கியுள்ளது. 

தனுஷுக்கும் இயக்குநர் வெற்றிமாறனுக்கும் பெரும் புகழையும் பாராட்டுகளையும் குவித்திருக்கும் அசுரன் படம் இந்தியாவின் பல மொழிகளில் ரீ மேக் ஆகவுள்ளது. இதன் தெலுங்கு ரீமேக்கில் வெங்கடேஷ் நடிப்பது உறுதியாகியுள்ள நிலையில் இந்தியில் ஷாருக் கான் நடிக்க விருப்பப்படுவதாகவும் அதை அவரது நண்பர் கரண் ஜோகர் இயக்கக்கூடும் என்று சொல்லப்பட்டது. 

ஆனால் திடீர் திருப்பமாக இரு தினங்களுக்கு முன்பு இயக்குநர் வெற்றிமாறனை மும்பைக்கு வரவழைத்து படம் குறித்து பல மணி நேரங்கள் சிலாகித்துப்பேசியிருக்கிறார் ஷாருக். இந்த சந்திப்பு குறித்து இரு தரப்புமே செய்திகள் வெளியிடாத நிலையில் ஷாருக் வெற்றிமாறனை அழைத்ததே அதன் இந்தி ரீ மேக்கையும் வெற்றியே இயக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்வதற்காகத்தான் என்று சொல்லப்படுகிறது. அடுத்து சூரியை நாயகனாக வைத்து படம் இயக்குவதாக அறிவித்த வெற்றி மாறனின் கியூவில் தமிழில் சூர்யா, விக்ரம், அவரது மகன் துருவ் நிற்பது போதாதென்று தற்போது ஷாருக் கானும் துண்டு விரித்துள்ளார். ஆகவே வெற்றிமாறனின் என்ன மாதிரியான முடிவை எடுக்கப்போகிறார் என்று கோடம்பாக்கமே ஆவலுடன் காத்திருக்கிறது.