இதுவரை மிகவும் சீரியஸான படங்களை மட்டுமே இயக்கிவந்த வெற்றிமாறன் முழுக்க முழுக்க காமெடி கலாட்டாவாக அடுத்து ஒரு படம் இயக்க்விருக்கிறார் என்றும் அதில் பரோட்டா சூரி கதாநாயகனாக புரமோட் செய்யப்படவிருக்கிறார் என்றும் நம்பகமான தகவல்கள் நடமாடுகின்றன.

தனுஷின் ‘பொல்லாதவன்’படம் மூலம் இயக்குநராக அறிமுகமான வெற்றிமாறன் அடுத்து ‘ஆடுகளம்’,’விசாரணை’,’வட சென்னை’என்ற தனித்துவமிக்க தமிழ்சினிமாவின் முக்கியமான படங்களை இயக்கினார். தற்போது எழுத்தாளர் பூமணியின் ‘வெக்கை’நாவலை அதே தனுஷை வைத்து ‘அசுரன்’என்ற பெயரில் இயக்கி முடித்து ரிலீஸ் நிலைக்கு வந்துவிட்டார்.

இது போன்ற சீரியஸான படங்களையே இயக்கிவரும் வெற்றிமாறன் அடுத்ததாக நகைச்சுவை நடிகர் சூரியுடன் இணையவுள்ளதாகவும் அது முழுக்க முழுக்க காமெடி கலாட்டாவாக இருக்கும் என்றும் அவரது உதவியாளர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  மேலும் இந்தப் படத்தின் மூலம் சூரி கதாநாயகனாகவும் அறிமுகமாகவுள்ளார். அசுரன் படத்தின் பணிகள் நிறைவடைந்ததும் வெற்றிமாறன் இதில் கவனம் செலுத்தவுள்ளதாகக் கூறப்படுகிறது.இந்தப் படத்தை எல்ரெடு குமார் தனது ஆர்.எஸ்.இன்ஃபொடெய்ன்மெண்ட் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். முன்னதாக இந்த நிறுவனம் கோ, முப்பொழுதும் உன் கற்பனைகள், விண்ணைத்தாண்டி வருவாயா, யாமிருக்க பயமேன் உள்ளிட்ட படங்களைத் தயாரித்துள்ளது. வெற்றிமாறனின் இந்த அதிர்ச்சி அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.