மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் பயிற்சி பட்டறையிலிருந்து வெளிவந்த ஒரு சினிமா சிற்பிதான் இயக்குநர் வெற்றிமாறன். தனுஷின் பொல்லாதவன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமான அவர், ஆடுகளம், விசாரணை, வடசென்னை என வரிசையாக தரமான ஹிட் படங்களை அளித்து முன்னணி இயக்குநராக உச்சம் தொட்டுள்ளார். 

கடைசியாக, வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் படத்தின் அசுரத்தனமான வெற்றி, அவரது புகழை பாலிவுட் வரை பரவச் செய்தது.
இதனால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கும் வெற்றிமாறன், தனது அடுத்தக்கட்ட திட்டங்கள் குறித்து பிரபல பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். 

அதில், பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் உடனான சந்திப்பு குறித்து பேசியுள்ள அவர், அசுரன் படம் குறித்து தன்னிடம் இரண்டு மணி நேரம் ஷாருக்கான் பேசியதாகவும், இந்த படத்தில் உள்ள பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் விஷயங்கள் குறித்து அவர் தன்னுடைய கருத்தை தெரிவித்ததாகவும் கூறியுள்ளார். ஆனால் ‘அசுரன்’ இந்தி ரீமேக் குறித்து எதுவும் பேசவில்லை என்றும், இந்த சந்திப்பு முழுக்க முழுக்க தனிப்பட்ட முறையிலான சந்திப்பு என்றும் வெற்றி மாறன் கூறியுள்ளார்.

தொடர்ந்து, தனது அடுத்தக்கட்ட திட்டங்கள் குறித்து பேசிய வெற்றிமாறன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தளபதி விஜய் இருவரையும் சந்தித்துக் கதைகள் சொல்லியிருப்பதாகக் கூறி இன்ப அதிர்ச்சியளித்துள்ளார். மேலும், சில ஆண்டுகளுக்கு முன்பு அஜித்தைத் தொடர்பு கொள்வதற்கு முயற்சி செய்ததாகவும், சரியான நேரம் வரும்போது அவர் கூப்பிடுவார் என நினைப்பதாகவும் கூறிய வெற்றிமாறன், நேரம் வரும்போது நிச்சயம் அஜித்துடன் படம் பண்ணுவேன்’ என்றும் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

மேலும் சூரி ஹீரோவாக நடிக்கும் படம், நெட்பிளிக்ஸூக்காக ஒரு படம், சூர்யாவுடன் ஒரு படம் என திட்டமிட்டுள்ளதாக கூறிய வெற்றிமாறன், ‘வடசென்னை 2’ இப்போதைக்கு இல்லை என்றும், அதற்கான பட்ஜெட் அதிகம் என்பதால் தள்ளி வைக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

இயக்குநர் வெற்றிமாறனின் மிரளவைக்கும் இந்த திட்டங்களை அறிந்து, ரஜினி, விஜய், சூர்யா ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் துள்ளி குதித்து வருகின்றனர். அப்புறம், தேசிய விருது இயக்குநருடன் தங்களது ஆஸ்தான நடிகர்கள் இணைகிறார்கள் என்றால் சும்மாவா...