‘திருவிழா படம்’ போன்ற சினிமா வார்த்தைகளை நாம் காணும்போது, வண்ணமயமான காட்சியமைப்புகள் மற்றும் அந்த மாயாஜால வித்தைக்காரரான ஒளிப்பதிவாளரை நினைவு கூர்வோம். அஜித்குமார் நடித்துள்ள விஸ்வாசம் படத்தின் வண்ணமயமான டிரெய்லரை வழங்கிய ஒளிப்பதிவாளர் வெற்றி அத்தகைய பாராட்டுக்களுக்கு மிகவும் தகுதியானவர். டிரெய்லர் பல மாஸான தருணங்களைக் கொண்டிருந்தாலும், இந்த படத்தில் மிகவும் சவாலான பகுதியாக வெற்றி கருதும் விஷயங்களை வெளிப்படுத்துகிறார்.

“நிச்சயமாக, அஜித் சார் அறிமுகம் காட்சி மிகவும் சவாலான விஷயம். அவருடன் பணிபுரியும் ஒவ்வொரு இயக்குனரும் வித்தியாசமான அறிமுக காட்சிகளை வழங்குவார்கள். இருப்பினும், இயக்குனர் சிவா என்று வரும் போது அது முற்றிலும் வித்தியாசமானது. எனென்றால் அவருடன் ஏற்கனவே மூன்று படங்களில் பணிபுரிந்தவர். எனவே விஸ்வாசத்தில் வித்தியாசமாக ஏதாவது ஒரு முயற்சியை செய்ய நாங்கள் நிறைய விவாதித்தோம்” என்கிறார் வெற்றி. அஜித்குமாரின் அறிமுக காட்சியை மிகவும் ஆர்வத்துடன் செய்திருக்கிறோம். ரசிகர்களுக்கு ஒரு சிறப்பான விருந்தாக இருக்கும் என்று நான் இந்த தருணத்தில் கூறிக் கொள்கிறேன். எல்லோரும் அவரை எதிர்பார்த்து கொண்டிருக்கும் வேளையில் அவரின் வருகையும், வந்து அவர் என்ன செய்கிறார் என்பதும் ரசிக்கும் விதத்தில் இருக்கும்” என்றார் வெற்றி.

அஜித்குமார் – சிவா – வெற்றி இந்த மூவர் கூட்டணி என்று வந்தாலே ‘தியேட்டர் தருணங்கள்’ தான் ரசிகர்களின் முன்னுரிமை. இது குறித்து வெற்றி கூறும்போது, “ஆம், ரசிகர்கள் கொண்டாட, விசில் அடிக்க படத்தில் நிறைய தருணங்கள் உள்ளன. அஜித் சார் இது போன்ற ஒரு பொழுதுபோக்கு கதாபாத்திரத்தை ஏற்று நடித்து 10-12 வருடங்கள் ஆகியிருக்கிறது என்றே சொல்லலாம். வீரம், வேதாளம், விவேகம் என அவரின் முந்தைய படங்களில் கூட, அவரது கதாபாத்திரங்கள் தீவிரத்தன்மையுடன் இருக்கும். ஆனால், விஸ்வாசம் படம் அவரின் எண்டர்டெயினர் அவதாரத்தை முழுமையாக வெளிக் கொண்டு வரும், ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் அவரை மிகவும் விரும்புவார்கள். அதேபோல அவரது எமோஷனல் கோணத்தையும் பெரிய அளவில் இதில் வெளிப்படுத்தியிருக்கிறார். “தூக்குதுரை” கதாபாத்திரத்துடன் ரசிகர்கள் எமோஷனலாக ஒன்றி விடுவார்கள்” என்றார்.

கதை நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறம் என இரு பின்னணியிலும் அமைக்கப்பட்டிருக்கிறது. ஒளிப்பதிவாளர் வெற்றி இது பற்றிய சுவாரஸ்யமான உண்மையை கூறும்போது, “கதை இரண்டு வேறுபட்ட பின்னணியில் நடப்பதால் நாங்கள் இருவேறு கலர் டோன் பயன்படுத்தியிருக்கிறோம். சண்டைக்காட்சிகளைப் பொறுத்தவரையில், மழை எபிசோடு மிகவும் சவாலான பகுதியாக இருந்தது. பார்வையாளர்கள் அதனை மிகவும் ரசிப்பார்கள் என நான் நம்புகிறேன்” என்றார்.