கடந்த 45 ஆண்டுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட மலையாளப்படங்களில் நடித்தவரும் பிரபல நடிகை ஜெயபாரதியின் கணவருமான சத்தார் கல்லீரல் தொடர்பான பாதிப்பால் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 67.

எம்.கிருஷ்ணன் நாயர் இயக்கத்தில் 1975ம் ஆண்டு வெளியான ’பார்யாயே அவஸ்யமுண்டு சமர்ப்பணம்’படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான சத்தார், 77ம் ஆண்டு வெளியான ஏ.வின்செண்டின் ‘அனாவரனம்’படத்தின் மூலம் ஹீரோவாக நடிக்கத்துவங்கினார். அடுத்து வில்லன், மற்றும் குணச்சித்திர வேடங்களில் இடைவெளியின்றி நடித்துக்கொண்டிருந்த சத்தார் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 4 ஆண்டுகளாக நடிப்பதை நிறுத்தியிருந்தார். அவரது நடிப்பில் வெளிவந்த படங்களில் ’காட் ஃபார் சேல்’,’காஞ்சி’, நம்பர் 66 மதுரா பஸ், ’22 ஃபீமேல் கோட்டயம், ரவுத்திரம், பகல், ’கலாபம்’ஆகியவை குறிப்பிடத்தக்கவை.தமிழில் 80 களில் வெளியான ‘மயில்’,’செளந்தர்யமே வருக வருக’போன்ற ஒன்றிரண்டு படங்களிலும் நடித்துள்ளார் அவர்.

தன்னுடன் நடித்தபோது பிரபல நடிகை ஜெயபாரதியை சத்தார் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். பின்னர் சில ஆண்டுகளில் கருத்துவேறுபாட்டால் இருவரும் விவாகரத்து செய்துகொண்டனர்.அவர்களது மகன் க்ரிஸ்.ஜே.சத்தாரும் திரைப்பட நடிகராவார். கடந்த சில மாதங்களாகவே கல்லீரல் தொடர்பான நோய்க்கு சிகிச்சை எடுத்து வந்த சந்தார் சிகிச்சை பலனின்றி இன்று காலை கொச்சியில்  காலமானார்.