தமிழ் சினிமாவில் தனித்துவமான காமெடிகளில் நடித்து பிரபலமானவர் நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி. இவர் 1965 ஆம் ஆண்டு 'வெண்ணிற ஆடை' படத்தில் அறிமுகமானதால் இவருடைய அடைமொழிப் பெயராக இது மாறியது. 

சிவாஜி, ரஜினி, கமல், விஜய், அஜித், என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்து பிரபலமான இவர் 'முள்ளும் மலரும்', 'அழியாத கோலங்கள்' உள்ளிட்ட சில படங்களில் வில்லனாகவும் நடித்து மிரட்டியுள்ளார். 

இவர் பேசும் இரட்டை அர்த்தம் கொண்ட வசனங்கள், முகபாவனை, மற்றும் வாய் அசைவுகள் இவரை மற்ற காமெடி நடிகர்களிடம் இருந்து தனித்துவமாக காட்டியது எனலாம். 

தமிழ் சினிமாவில் 300 படங்களுக்கு மேல் நடித்துள்ள இவர் கடைசியாக 'வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க' படத்தில் நடித்தார்.  இந்த படத்தை தொடர்ந்து வயது மூப்பு காரணமாக தற்போது சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டார். 

மணிமாலா என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்ட வெண்ணிற ஆடை மூர்த்தி, தன்னுடைய 80வது பிறந்த நாளை மிகவும் எளிமையாக குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மத்தியில் கொண்டாடினார். இந்த நிகழ்ச்சியில் திரையுலகை சேர்ந்த பிரபலங்களும் கலந்து கொண்டு இவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.