சிம்பு நடிப்பில்  வெங்கட் பிரபு இயக்கவிருக்கும்   புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது.

திழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் நாற்காலி ஆசையில்  அரசியலுக்கு வருவது ஒரு பக்கம் நடந்துகொண்டிருக்க  அவர்களுக்கு அடுத்த கட்டத்தில் இருக்கும் நடிகர்களும் தங்களின் பங்கிற்கு போராட்டம், அரசியல் கருத்து என தாறுமாறாக குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக வெங்கட் பிரபு இயக்கத்தில்  சிம்பு நடிப்பதாக பேச்சு வார்த்தை நடந்தது. ஆனால் அது நடக்காமலேயே போனநிலையில் இயக்குநர் வெங்கட் பிரபுவுடன் முதன்முறையாக இணைந்திருக்கும் படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

‘மாநாடு’ என தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படமும் அரசியலை மையமாக வைத்தே உருவாகிறது என்பதை தற்போது வெளியாகியுள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் இருந்து யூகிக்கலாம். சுவரெழுத்துகள் போன்று டைட்டில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த டைட்டிலில் அரசியல் மாநாடு நடக்கும் விதமாகக் கொடிகளும், மாநாடு நடப்பது போன்ற செட்டும், அதில் கட் அவுட்டுகளும் ஏராளமான விளக்குகளும் அமைந்துள்ளன.  “தனியாக நின்றாலும் நல்லவை பக்கம் நில்” என்ற வாசகமும் போஸ்டரில் இடம்பெற்றுள்ளது.

போஸ்டரை வெளியிட்ட வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பதிவில் ‘#aVPpolitics' என்று வெங்கட் பிரபுவின் அரசியல் என்ற பொருள்படும் படி குறிப்பிட்டுள்ளார்.

வெங்கட் பிரபு தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ஆர்.கே.நகர். சரவண ராஜன் இயக்கும் இந்தப் படத்திற்கு தமிழக அரசியலில் பெரும் கவனம் பெற்ற ஆர்.கே.நகர் தொகுதியை குறிப்பிடும் விதமாக டைட்டில் வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த படத்தில் அதிகமாக மக்களின் போராட்டம், அனல் தெறிக்கும் அரசியல் வசனம் இருக்கும், ஆனால் இது வழக்கமான அரசியல் படமாக இருக்காது. சத்யராஜ் நடித்த இப்படத்தை மணிவண்ணன் இயக்கத்தில் 1994 இல் வெளிவந்த அமைதிப்படை ஸ்டைலில் இருக்கும் என வெங்கட் பிரபு டீம் வழியாக கசிந்தது இந்த தகவல்.

’மாநாடு’ படத்தை வி ஹவுஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கிறது. மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய விபரங்கள் விரைவில் வெளியாக உள்ளன. அடுத்த ஆண்டு கோடை விடுமுறையை முன்னிட்டு படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.