தல அஜித்திற்கு "மங்காத்தா" படம் மூலம் சூப்பர் மாஸ் கொடுத்தவர் இயக்குநர் வெங்கட் பிரபு. அந்த படத்தில் முதன் முறையாக சால்ட் அண்ட் பேப்பர் கெட்டப்பில் தோன்றிய அஜித்குமாரின் மாஸ் ஸ்டைல் அனைவரையும் மிகவும் கவர்ந்தது. அதையடுத்து தலயின் தீவிர ரசிகரான சிம்புவை வைத்து படம் இயக்க உள்ளதாக அறிவித்தார் வெங்கட் பிரபு. சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்க உள்ள அந்தப் படத்திற்கு "மாநாடு" என பெயர் வைக்கப்பட்டது. அஜித்திற்கே சூப்பர் ஓப்பனிங் கொடுத்தவர் நம்ம லிட்டில் சூப்பர் ஸ்டாரையும் தட்டிப் பிரிச்சிடுவார் என சிம்பு ரசிகர்கள் ஆர்வமாக காத்திருந்தனர். 

ஆனால் வழக்கம் போல நம்ம லிட்டில் சூப்பர் ஸ்டார் பண்ண கால்ஷீட் சொதப்பல்களால் கடுப்பான தயாரிப்பாளர் தரப்பு சிம்புவை "மாநாடு" படத்தில் இருந்து நீக்கியதாக அறிவித்தது. பின்னர் பல கட்ட பஞ்சாயத்துகளுக்குப் பிறகு நல்ல பிள்ளையாக ஷூட்டிங்கிற்கு வருவேன் என ஒப்புக்கொண்டார் சிம்பு. இதையடுத்து "மாநாடு" படத்தின் ஷூட்டிங் விரைவில் ஆரம்பிக்கப்படும் என ரசிகர்கள் கனவு கண்டுகொண்டிருந்தனர். இந்நிலையில் சிம்பு ரசிகர்களின் கனவில் மண்ணை வாரிப்போட்டுள்ளார் "மாநாடு" பட இயக்குநர் வெங்கட் பிரபு.

 

ராகவா லாரன்ஸ் உடன் இருக்கும் புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வெங்கட் பிரபு, "நல்லதே நினைப்போம், நல்லதே பேசுவோம், நல்லதே நடக்கும், விரைவில் நல்ல அப்டேட்" வரும் என பதிவிட்டுள்ளார். அதைப் பார்த்து ஷாக்கான சிம்பு ரசிகர்கள் தலைவா, மாநாடு படம் என்னாச்சு என கேள்வி எழுப்பியுள்ளனர். 

 

பாலிவுட்டில் அக்‌ஷய் குமாரை வைத்து "லக்‌ஷ்மி பாம்" படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தெலுங்கில் ராம் சரண், சமந்தா, ஆதி நடித்த ரங்கஸ்தலம் படத்தின் ரீமேக் உரிமையை ராகவா லாரன்ஸ் வாங்கியிருப்பதாகவும், விரைவில் அப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் வெங்கட் பிரபு, ராகவா சந்திப்பு ரங்கஸ்தலம் படத்தின் ரீமேக்கிற்காக இருக்கும் என தகவல் பரவி வருகிறது.