Asianet News TamilAsianet News Tamil

‘ஸ்வாதி கொலை வழக்கு’படத்தில் விடுதலைச் சிறுத்தைகளுக்கு ஆட்சேபகரமான காட்சிகள் இல்லை’...பிரிவியூ பார்த்த திருமாவளவன்...

’ஸ்வாதி கொலை வழக்கு’ என்று பெயரிடப்பட்டு பின்னர் ‘நுங்கம்பாக்கம்’என்று பெயரிடப்பட்டுள்ள படம் குறித்து விடுதலைச் சிறுத்தைகளுக்கு எந்த வித மாற்றுக்கருத்தும் இல்லை’என்று அக்கட்சியின் தலைவன் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

vck thirumavalavan interview
Author
Chennai, First Published Jul 22, 2019, 1:09 PM IST

’ஸ்வாதி கொலை வழக்கு’ என்று பெயரிடப்பட்டு பின்னர் ‘நுங்கம்பாக்கம்’என்று பெயரிடப்பட்டுள்ள படம் குறித்து விடுதலைச் சிறுத்தைகளுக்கு எந்த வித மாற்றுக்கருத்தும் இல்லை’என்று அக்கட்சியின் தலைவன் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.vck thirumavalavan interview

விஜயகாந்த் நடித்த ‘உளவுத்துறை’, சத்யராஜ் நடித்த ‘கலவரம்’, அருண்விஜய் நடித்த ‘ஜனனம்’ உட்பட பல படங்களை இயக்கிய திரைப்படக் கல்லூரி மாணவர் டி.ரமேஷ் செலவன், இப்போது ரவிதேவன் தயாரிப்பில் புதுமுகங்கள் மனோ, ஐரா நடிப்பில் ‘நுங்கம்பாக்கம்’ என்கிற படத்தை இயக்கி இருக்கிறார்.இந்தப் படம் வருகிற 28 ஆம் தேதி வெளியாக உள்ளது.இந்த நிலையில், இந்தப் படத்தை வெளியிட எதிர்ப்பு தெரிவித்து தலித் சமூகத்தினர் சிலர் முயற்சி செய்தனர்.தலித் சமூகத்திற்கு எதிராகவோ, ராம்குமாருக்கு எதிராகவோ, சுவாதிக்கு எதிராகவோ இந்தப் படம் எடுக்கவில்லை என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவனைச் சந்தித்து, இயக்குநர் ரமேஷ் செல்வனும், தயாரிப்பாளர் ரவிதேவனும் முறையிட்டனர்.

பிறகு, இந்தப் படத்தை பார்க்க வருமாறு அவருக்கு அழைப்பும் விடுத்தனர். அதனை ஏற்றுக் கொண்ட தொல்.திருமாவளவன், நேற்று நுங்கம்பாக்கத்தில் உள்ள லீ மேஜிக் பிரிவியூ திரையரங்கில் ’நுங்கம்பாக்க’ம் திரைப்படத்தைப் பார்த்தார்.
படம் பார்த்த பிறகு விரிவாகப் பேசிய அவர்,’’தயாரிப்பாளர் ரவிதேவன் அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் ரமேஷ் செல்வன் அவர்களின் இயக்கத்தில், நுங்கம்பாக்கம் எனும் திரைப்படம் வெளியாக இருக்கிறது.இந்தத்திரைப்படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்டிருக்கிற ஒரு கலைப்படைப்பாகும்.இது பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையில், கடுமையான நெருக்கடிக்களுக்கு இடையில் தயாரிக்கப்பட்டிருக்கிறது.vck thirumavalavan interview

சுவாதி கொலை வழக்கை மையப்படுத்திய இந்தத்திரைப்படம், ‘சுவாதி கொலை வழக்கு’ என்கிற பெயரில் வெளியிடுவதற்கு எதிர்ப்பு கிளம்பிய சூழலில் நுங்கம்பாக்கம் என்கிற பெயரில் தயாரிக்கப்பட்டு வெளிவர அனைத்து அனுமதிகளையும், உரிமத்தையும் பெற்றிருக்கிறது.பெயர் மாற்றம் செய்யப்பட்டு இருந்தாலும் கூட ஊர்பெயர்கள், நபர் பெயர்கள், சம்பவங்கள் அனைத்தும் உண்மை சம்பவத்தோடு மாறுபடாமல் கதையோட்டம் அமைக்கப்பட்டிருக்கிறது.

இது தொடர்பாக விடுதலைச்சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த பொறுப்பாளர் ஒருவர் அண்மையில் காவல் துறையில் புகார் அளித்ததைத் தொடர்ந்து இயக்குனர் ரமேஷ் செல்வன், தயாரிப்பாளர் ரவிதேவன் அவர்களும், அவரது நண்பர்களும் என்னை வந்து சந்தித்தார்கள்.ஏற்கனவே, இந்தப்படம் தயாரிக்கத் தொடங்கிய போதே ராம்குமார் அவர்களின் தந்தை மற்றும் ராம்குமாரின் வழக்கறிஞர் ராமராஜ் ஆகியோர் என்னிடத்தில் வந்து இது குறித்து கலந்துரையாடல் செய்தனர்.

அப்போதே இயக்குநர் ரமேஷ் செல்வன் அவர்கள் என்னை நேரில் சந்தித்து, நான் சமூக அக்கறையோடு ஏற்கனவே பல திரைப்படங்களை இயக்கி இருக்கிறேன். உளவுத்துறை, ஜனனம், கலவரம் என பல படங்களை இயக்கி இருக்கிறேன். பொருளாதாரம் எனக்கு முக்கியமில்லை. சமூகத்தில் நிலவுகின்ற சிக்கல்கள் குறித்து, முரண்பாடுகள் குறித்து ஆவணப் படுத்துகிற என்கிற அடிப்படையில் தான், நான் திரைப்படங்களை இயக்கி வந்திருக்கிறேன். அந்த அடிப்படையில் தான் இதில் எழுந்துள்ள பல்வேறு கேள்விகளை, விவாதப்படுத்த வேண்டும். மீண்டும் அதை உரையாடலுக்கு உட்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில்தான் இந்த படத்தை இயக்கி இருக்கிறேன் என்று என்னிடத்திலே விளக்கம் தெரிவித்தோடு மட்டுமல்லாமல், இந்த படத்தை திறயீடுவதற்கு முன்னதாக நீங்கள் கட்டாயம் பார்க்க வேண்டும். அதில் உங்கள் கருத்துக்களை சொல்ல வேண்டும் என்று, ஏற்கனவே என்னிடத்தில் அவர் கூறியிருந்தார்.vck thirumavalavan interview

அந்த அடிப்படையில் நுங்கம்பாக்கம் திரைப்படத்தை பார்க்கிற வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.இதுவரை கிடைத்த தகவல்களை வைத்துக் கொண்டு, வெளிவந்த ஆதாரங்களை வைத்துக் கொண்டு, காவல்துறை மற்றும் ஊடகங்கள் வெளியிட்ட கருத்துக்களை வைத்துக் கொண்டு இந்த படத்தின் கதையை பின்னியிருக்கிறார் என்றாலும் கூட, மாற்றுக் கருத்துக்களும் வலுவாக இதிலே பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன.

அதாவது, குறிப்பாக ராம்குமார் இந்த கொலையை தனியாக செய்திருக்க வாய்ப்பில்லை என்று விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் கருத்துக்களை வைத்தோம். அந்த கொலையை கண்டித்தோம். சுவாதியின் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூறினோம். அந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று கூறினோம். அப்போது தான் உண்மை வெளிவரும் என்று கூறினோம். விடுதலை சிறுத்தைகளின் சார்பிலே வலுவாக கருத்துக்களை முவைத்தோம்.இந்த வாதங்கள் அனைத்தும் இந்தத் திரைப்படத்தில் பதிவாகி இருக்கிறது.

தனி ஒரு ஆளாக ராம்குமார் கொலை செய்திருக்க வாய்ப்பில்லை. ராம்குமார் பலிகடா ஆக்கப்பட்டு இருக்கிற சூழல் இருக்கிறது. அந்த பெண்ணுக்கு வேறு ஒரு இஸ்லாமிய இளைஞரோடு பழக்கம் இருந்திருக்கிறது. இப்படிப்பட்ட பல கருத்துக்கள், வெளியிலே பேசப்படுகிற, விவாதிக்கப்படுகிற கருத்துக்கள், அல்லது ராம்குமாருக்கு ஆதரவாக பேசப்படுகிற கருத்துக்கள் அனைத்தும் ஒன்று கூட விடாமல் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.ராம்குமாருக்கு எதிரான கருத்து, ராம்குமாருக்கு ஆதரவான கருத்து என இரண்டு தரப்பு கருத்துகளையும் தன்னுடைய திரைப்படத்தில் ஒரு விவாதமாக, நீண்ட உரையாடலாக பதிவு செய்திருக்கிறார். தனிப்பட்ட முறையில் யாரையும் பழிக்க வேண்டும், அல்லது காயப்படுத்த வேண்டும் என்ற நோக்கம் அதிலே இல்லை.

தனிப்பட்ட முறையில் என்னை பொருத்தவரையிலே என்னுடைய கருத்தில் அதாவது படம் நிறைவடைகிற போது ராம்குமார் கொலையாளி என்று நிரூபிக்க கூடிய வகையில் படத்தின் போக்கு அமைகிறது. அதில் எனக்கு உடன்பாடில்லை. அந்த கருத்திலே நான் மாறுபடுகிறேன்.சுவாதி கொலையின் பின்னணியில் இன்னும் பல மர்ம முடிச்சுகள் இருப்பதாக நான் கருதுகிறேன். அதிகாரிகள், ஆட்சியாளர்கள் அந்த வழக்கை ஒன்றுமில்லாமல் செய்துவிட்டார்கள். ராம்குமாருடைய சாவும் சந்தேகத்திற்கு உரியது தான் என்பது என்னுடைய நிலைப்பாடு. என்னுடைய கருத்து. விடுதலைச் சிறுத்தைகளின் கருத்து.

படத்தை நிறைவு செய்கிற போது ஆய்வாளராக கதாபாத்திரத்தை மேற்கொண்டிருக்கிற அந்த நடிகர் தன்னுடைய ஆய்வை அறிக்கையாக தயாரித்துக் கொண்டிருக்கிற போது, ராம்குமார் அதாவது ராஜ்குமார், தற்கொலை செய்து கொண்டார் என்ற தகவல் கிடைத்தும் அவர் அதிர்ச்சி அடைந்து புழல் சிறைச்சாலைக்கு ஓடி சிறைச்சாலை கண்காணிப்பாளரிடத்திலே சண்டை போடுகிறார். அவரை பாதுகாப்பாக கண்காணித்திருக்க வேண்டும். பொதுமக்கள் ராம்குமார் அல்லது ராஜ்குமார் குற்றவாளி இல்லை என்று எண்ணிக் கொண்டிருக்கும் சூழ்லில் அது உண்மை என்று நிரூபிக்க கூடிய வகையிலே இப்படி முடிந்துவிட்டதே இதற்கு சிறை நிர்வாகம் தானே பொறுப்பு என்று பேசுவது போன்ற காட்சியும் இருக்கிறது.

முற்றும் முழுதாக அவரே குற்றவாளி என்று நிரூபிக்கிற முயற்சியில் இயக்குநர் ஈடுபடவில்லை. இருதரப்பிலும் உள்ள வாதங்களை, இரு தரப்பிலும் பேசப்படுகிற நியாயங்களை, அதாவது அதிகாரிகள் தரப்பிலே சொல்லப்படுகிற கருத்துக்களையும், வாதங்களையும், ராஜ்குமார் குடும்ப தரப்பில், அல்லது அவரது தரப்பில் சொல்லப்படுகிற வாதங்களையும் தவறாமல் அவர் வைத்திருக்கிறார். அந்த வகையிலே அது ஆறுதலைத் தருகிறது.vck thirumavalavan interview

அந்த உண்மை சம்பவம் ஒரு நூலிழை போல் இருந்தாலும், அதை வைத்து ஒன்னே முக்கால் மணி நேரம் ஒரு நீண்ட திரைப்படத்தை அவருக்கே உரிய பாணியில் மக்களின் கவனத்தை ஈர்க்கக்கூடிய வகையில் இயக்கி இருக்கிறார். தன்னுடைய வாதங்களை முன் வைத்திருக்கிறார். காவல்துறை எப்படி விசாரணை நடத்தும். சிறைத்துறை எப்படி கைதிகளை நடத்தும். ஊடகங்கள் எப்படி செய்திகளை சேகரிக்கும். அல்லது எப்படி வெளியிடும். இவற்றையெல்லாம் பொதுமக்களுடைய பார்வைக்கு தத்ரூபமாக கொண்டு வந்து சேர்த்திருக்கிறார்.

ஒரு கலைப் படைப்பு என்கிற வகையில், அவர் அனுபவத்தை வைத்து பட்டறிவை வைத்து இந்த படத்தை மிக கவனமாக எச்சரிக்கையாக மக்களுடைய கவனத்தை ஈர்க்கக்கூடிய வகையில் அமைத்திருக்கிறார்.ஆனாலும், அடிப்படை கருத்திலேயே எனக்கு மாறுபாடு இருக்கிறது. அதாவது காவல்துறை சுவாதி கொலை வழக்கை ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட்டது. ராம்குமார்தான் அல்லது ராஜ்குமார்தான் குற்றவாளி என்று அவர்களால் நிரூபிக்க முடியவில்லை.ராம்குமார் உடைய அல்லது இந்த கதாநாயகன் ராஜ்குமார் உடைய மரணம் தற்கொலைதானா என்கிற கேள்விக்கு விடை கிடைக்கவில்லை.

சுவாதியின் கொலையில் அல்லது சுமதியின் கொலையில் வேறென்ன மர்ம முடிச்சுகள் இருக்கின்றன என்பதை கண்டறிய முடியவில்லை. அந்த வழக்கை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டது ஆட்சி நிர்வாகம். அவ்வளவுதான் அந்த வழக்கு. அந்த அடிப்படையிலேயே இந்த கதையும் அமைந்திருக்கிறது. மொத்தத்தில் மக்கள் தங்களுக்கிடையில் மீண்டும் ஒரு நெடிய விவாதத்தை நடத்துவதற்கான வாய்ப்பை இந்த படம் உருவாக்கித் தந்திருக்கிறது.

அதிகார வர்க்கத்தை புரிந்து கொள்வதற்கு, இப்படிப்பட்ட குற்ற போக்குகளைப் புரிந்து கொள்வதற்கு, சமூக உளவியலை அறிந்து கொள்வதற்கு ஏற்ற வகையில், இளம் தலைமுறையினர் விவாதிக்கிற வகையில், இந்த படத்தை இயக்குனர் எடுத்திருக்கிறார்.மற்றபடி, விடுதலைச் சிறுத்தைகளுக்கு இந்த திரைப்படத்தில் வேறு எந்த முரண்பாடும் இல்லை. இந்த இந்த திரைப்படத்தை வெளியிடுவதற்கு புகார் அளித்திருக்கிற எமது கட்சியின் தோழர், இந்த படத்தை இன்று வந்து பார்க்க வேண்டும் என்று கேட்டிருந்தேன். அவர் வந்தரா என்று எனக்கு தெரியவில்லை. அதனால், எந்தச்சிக்கலும் திரைப்படத்தை வெளியிடுவதற்கு இருக்காது. அதற்கு எந்த முகாந்திரமும் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்’என்று கூறியுள்ளார் திருமாவளவன்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios