அடுத்தடுத்த படங்களில் வாய்ப்புப் பெறுவதற்காக படு செக்ஸியான படங்களை தங்களது ட்விட்டர் பக்கங்களில் பகிரும் நடிகைகளுக்கு மத்தியில் தான் டூப் போடாமல் ஒரிஜினலாக நடித்த அதிரடி ஆக்‌ஷன் வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார் நடிகை சரத் வரலட்சுமி.

‘டேனி’, ‘வெல்வெட் நகரம்’, ‘ராஜபார்வை’, ‘கன்னித்தீவு’, ‘கன்னிராசி’, ‘காட்டேரி’, ‘தெனாலி ராமன் பி.ஏ.பி.எல்’, ‘ரணம்’  என்று கைவசம் ஏழெட்டுப்படங்களுக்கும் மேல் வைத்துக்கொண்டு தென்னிந்திய மொழிப் படங்களில் பிசியாக நடித்து வரும் வரலட்சுமி, தற்போது கே.வீரக்குமார் இயக்கத்தில் ’சேஸிங்’ என்ற ஆக்‌ஷன் திரில்லர் படத்தில் நடித்து வருகிறார். வரலட்சுமியின் கதாபாத்திரத்தை மையமாக வைத்து முழுக்க முழுக்க மலேசியாவில் இந்த படம் உருவாகிறது. 

இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தின் சண்டைக்காட்சி ஒன்றை படக்குழு சமீபத்தில் படமாக்கியுள்ளது. அதில் வரலட்சுமி கயிறு பயன்படுத்தாமல், டூப் ஏதுமில்லாமல் சண்டை போடுகிறார். இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வரலட்சுமி அதில், ’கடுமையான உழைப்புக்கு கிடைத்த பலன், இதை யாரும் வீட்டில் முயற்சிக்க வேண்டாம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

வரலட்சுமியின் இந்த ஸ்டண்ட் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பிரபல சண்டைப்பயிற்சி இயக்குனர் சூப்பர் சுப்புராயன் இந்த படத்திற்கான சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார். தஷி இசையமைக்க, கிருஷ்ணசாமி ஒளிப்பதிவு செய்கிறார். 

ஸோலோ ஹீரோயினாக நடிக்க வரலட்சுமி இவ்வளவு ஆர்வம் காட்டினாலும் அவருக்கென்று தனிப்பட்ட வியாபாரம் இல்லாததால் ரிலீஸுக்குத்தயாரான அவரது பெரும்பாலான பட்ங்கள் வெளிவராமல் நிற்கின்றன.