சென்னையில் பள்ளி மாணவிகளுக்கான நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை வரலட்சுமி சரத்குமார், செய்தியாளர்களிடம் பேசும் போது கண்டிப்பாக அரசியலுக்கு வருவேன் என அதிரடியாக கூறியுள்ளார்.

'போடா போடி' படத்தின் மூலம் அறிமுகமான நடிகை வரலட்சுமி சரத்குமார் சினிமாவில் நடிப்பதை தாண்டி,  பெண்கள் நலனுக்காக 'சக்தி' என்கிற அமைப்பை நடத்தி வருகிறார். பெண்கள் பாதுகாப்பிற்கும் அடிக்கடி குரல்கொடுத்து வருகிறார்.

 

மேலும் சின்னத்திரையில், விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் இவர் பள்ளி மாணவிகளுக்கு இலவச நாப்கின் மிஷின் கொடுக்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்... "நமக்கு நாமே பாதுகாப்பு எனவும், தற்காப்பு என்பது பெண்களுக்கு அவசியம் எனவும் கூறினார்.  சமூக வலைதளங்களை சரியான வழியில் பயன்படுத்த வேண்டும் என வரலட்சுமி சரத்குமார் கூறினார்". 

மேலும் அப்பா சரத்குமாரின் அரசியலுக்கும் தனக்கும் சம்மந்தமில்லை எனவும், ஆனால் அரசியலை நன்கு கற்றுக்கொண்ட பிறகு சரியான நேரத்தில் அரசியலுக்கு கண்டிப்பாக வருவேன் என அதிரடியாக தெரிவித்துள்ளார்.