நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா.  கடந்த 2000-ம் ஆண்டில் ஆகாஷ் என்ற டிவி நடிகரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு விஜய் ஸ்ரீஹரி என்ற மகன் மற்றும் ஜோவிகா என்ற மகள்  உள்ளனர். 

இதன் பின்னர்  வனிதாவுக்கும் ஆகாஷுக்கும் விவாகரத்து ஆனது.  2007-ம் ஆண்டில் ஆனந்தராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார் வனிதா. இவர்களுக்கு ஜெயந்திகா என்ற மகள் பிறந்தார்.

2010-ம் ஆண்டுக்கு பின்னர் ஆனந்தராஜையும் விவாகரத்து செய்தார் வனிதா. தற்போது அவர் பிக்பாஸ்-3 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.

தந்தை ஆனந்தராஜுடன் ஜெயந்திகா தெலுங்கானாவில் வசித்து வந்தார். மகள் ஜெயந்திகாவை கடந்த பிப்ரவரி மாதம் வனிதா சென்னைக்கு அழைத்து வந்துள்ளார். ஆனால் தனது மகளை கடத்திச் சென்றுவிட்டதாக தெலுங்கானா போலீசில் ஆனந்தராஜ் புகார் அளித்துள்ளார்.

புகாரை ஏற்றுக்கொண்ட அம்மாநில போலீசார் வனிதா மீது ஆள்கடத்தல் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

 இந்த வழக்கில் வனிதாவிடம் விசாரணை நடத்துவதற்காக தமிழ்நாடு போலீஸ் உதவியை நாடியது தெலுங்கானா போலீஸ். பிக்பாஸ் வீடு காஞ்சிபுரம் மாவட்டம் பூந்தமல்லி அருகே நசரத்பேட்டை பகுதியில் உள்ள பிலிம்சிட்டி அரங்கில் அமைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நசரத் பேட்டை போலீசாருடன் தெலுங்கானா போலீசார் விசாரணை நடத்தினர்.

ஆனால் வனிதா தனது வழக்கறிஞர் மூலம் குழந்தையை அந்த போலீசார் முன்பு ஆஜர்படுத்தினார். அப்போது அவர்களிடம் விளக்கம் அளித்த வழக்கறிஞர் நீதிமன்றத்தின் உரிய அனுமதி பெற்றுத்தான் குழந்தையை வனிதா தன்னுடன் வைத்துள்ளார்.

பொய்யான புகாரின் அடிப்படையில் மனித உரிமைகளை மீறி நடந்து கொண்ட தெலங்கானா போலீசார் மீது மனித உரிமை ஆணையத்தில் புகார் அளிக்க உள்ளதாக வழக்கறிஞர் தெரிவித்தார்.