நடிகர் விஜயக்குமாரின் மகளான வனிதா தனது குடும்பத்தினருடன் ஏற்பட்ட சண்டை காரணமாகவும், ஏற்கனவே இரண்டு கணவன்களை விவாகரத்து செய்துவிட்டதாலும் தனது இரு மகள்களுடன் தனியாக வசித்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு வனிதாவிற்கு மூன்றாவது திருமணம் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது. சோசியல் மீடியாவில் திருமண பத்திரிகையும் வெளியாகி வைரலானது. ரசிகர்களின் சந்தேகத்திற்கு விளக்கமளித்த வனிதா, பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்துகொள்ள உள்ளதாக அறிவித்தார். 

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமான வனிதா, அதன் பின்னர் குக்வித் கோமாளி நிகழ்ச்சியிலும் பங்கேற்று வெற்றி வாகை சூடினார். தற்போது யூ-டியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். லாக்டவுன் காரணமாக வனிதாவின் யூ-டியூப் ஒன்றை துவங்க, அதனை எப்படி கொண்டு செல்வது என திணறிய வனிதாவுக்கு, உதவி செய்தவர் தான் பீட்டர் பால்.

ஆரம்பத்தில் நட்பாக தொடர்ந்த இவர்களுடைய உறவு பின் காதலாக மாறியது. மற்றவர்களை போல், உள்ளே ஒன்று வைத்து கொண்டு வெளியில் ஒன்றை பேசுவதை விரும்பாத வனிதா, யார் என்ன விமர்சனம் செய்தாலும் பரவாயில்லை என அதிரடியாக தன்னுடைய திருமணம் பற்றி அறிவித்தார்.

அந்த வகையில் தன்னுடைய அம்மா - அப்பாவின் திருமண நாளான இன்று தன்னுடைய திருமணத்தையும் நடத்த முடிவு செய்தார் வனிதா. அதன் படி இவர்களுடைய திருமணம் வீட்டிலேயே மிகவும் எளிமையான முறையில் நடந்து முடிந்துள்ளது. இதுகுறித்த சில புகைப்படங்களும் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் திருமண பெண்ணான வனிதா, அவருடைய திருமணத்திற்கு மேக்அப் போட்டு தயாராவதை, அவருடைய யூடியூப் சேனலில் லைவ் செய்துள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.