இந்தி சினிமாவில் படுகவர்ச்சியாக நடிக்கும் நடிகைகளில் ஒருவர் வாணி கபூர். கடந்த 2013ம் ஆண்டு பாலிவுட் திரையுலகில் காலடி எடுத்துவைத்த அவர், ஆஹா கல்யாணம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழிலும் அறிமுகமானார். இவர் அண்மையில் ஹ்ரித்திக் ரோஷனுடன் இணைந்து நடித்த வார் திரைப்படமும் பெரும் வரவேற்பை பெற்றது. 

31 வயதான நடிகை வாணி கபூர், சமூக வலைத்தளங்களில் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களை வெளியிடுவதுடன், தனது கவர்ச்சி புகைப்படங்களையும் வெளியிட்டு அவ்வபோது ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அண்மையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம் ஒன்று தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர் அணிந்திருந்த மேலாடையில் ‘ஹரே ராம்’என்ற பெயர் அச்சிடப்பட்டிருந்தது தான் இந்த சர்ச்சைக்கு காரணம். இதனை கண்டு கொதித்தெழுந்த இந்து மதத்தினர், வாணி கபூரை தாக்கி இணையப்பக்கங்களில் கடுமையாக விமர்சித்தனர்.

இந்து மதத்தினரின் உணர்வுகளை புண்படுத்தும் நோக்கில், செயல்பட்டுள்ளதாக கூறி, அவர் பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். இதனால் பாலிவுட் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டதை அடுத்து அந்த பதிவை வாணி கபூர் நீக்கியுள்ளார். இதுதொடர்பாக வாணிகபூருக்கு எதிராக என்.எம்.ஜோஷி, மார்க் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

 

அதன் பேரில் நடவடிக்கை மேற்கொண்ட போலீசார், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 6 மாதத்திற்கு முன்பு, பாலிவுட் நடிகை ஊர்மிளா மடோங்கர் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், மீண்டும் ஒரு பாலிவுட் நடிகை சர்ச்சையில் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.